
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி கொண்டிருந்தபோது, அங்கு அத்துமீறி நுழைந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அங்கிருந்த முக்கிய ஆவணத்தை எடுத்து சென்றுவிட்டதாக, வருமானவரி துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தும்போது, வீட்டில் இருப்பவர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியில் செல்லவும், மற்றவர்கள் உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்படுவது விதி.
ஆனால் அதையும் மீறி, இன்று காலை தளவாய் சுந்தரம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் சிலரும், அங்கிருந்த, துணை ராணுவத்தினரிடம் உள்ளே அனுமதிக்க கோரி தகராறு செய்துள்ளனர்.
விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு நடக்க மத்திய அரசும், ஓ.பன்னீர்செல்வமும்தான் காரணம் என்று கூறியும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, துணை ராணுவத்தினரை நெருக்கி தள்ளி விட்டு, தளவாய் சுந்தரம், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் வீட்டுக்குள் நுழைந்து விட்டனர்.
பின்னர் அங்கிருந்த சில பேப்பர்களை உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியில் எடுத்து வீச, அதை வெளியில் நின்ற ஆதரவாளர்களின் சிலர் கிழித்து போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
இதனால், சோதனையிட வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அத்துமீறி நுழைந்த அமைச்சர்கள் உள்ளே இருந்த ஆவணத்தை வெளியே எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, விதியை மீறி வெளியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுத்துள்ளார். அப்போது அதை துணை ராணுவத்தினர் பேட்டி கொடுக்க கூடாது என்று தடுத்துள்ளனர்.
ஆனால், அதையும் மீறி அவர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். எனவே, வருமானவரி துறை சோதனையின் போது விதிகளை மீறி செயல்பட்ட அமைச்சர் மீது, அதற்காக வேறு ஒரு வழக்கும் பதிவு செய்ய படலாம் என்று கூறப்படுகிறது.