செயல் புயல் செங்கோட்டையன்! அலையில் வந்த அமைச்சர்கள் மிரளுகிறார்கள்...

Asianet News Tamil  
Published : May 18, 2017, 10:06 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
செயல் புயல் செங்கோட்டையன்! அலையில் வந்த அமைச்சர்கள் மிரளுகிறார்கள்...

சுருக்கம்

Ministers are intimidating Action leader Sengottaiyan

எம்.ஜி.ஆர். ரசிகர்கள் உணர்ச்சி பொங்கும் தருணங்கள் அவை. சண்டையின் துவக்கத்தில் வில்லனிடம் பொளேர் பொளேர் என்று நான்கைந்து அடிகளை வாங்கி க்ளோசப்பில் காண்டாகும் எம்.ஜி.ஆர். தன் உதடோரம் ரத்தம் வழிவதை உணர்ந்த பின் தாறுமாறாக திருப்பி தாக்க ஆரம்பிப்பார் பாருங்கள்...தியேட்டரில் தீ கிளம்பும்.

உணர்ச்சி வேகத்தில் கையிலிருக்கும் குச்சியை தூக்கி திரையை நோக்கி வீசி ‘தலைவா புடிச்சுக்கோ’ என்று புல்லரிப்பான் ரசிகன். ஒரு முறை ரத்தம் கண்ட பிறகு கடைசி வரை எம்.ஜி.ஆர்_க்கு சரிவே கிடையாது. 

நம்ம கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மிகப்பெரிய எம்.ஜி.ஆர். ரசிகர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளைய தியேட்டர்களில் வாத்தியார் படம் போடுறான் என்று தெரிந்தால் வரிந்து கட்டிக் கொண்டு முன்னால் நிற்பார். 

செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கையும் எம்.ஜி.ஆர். ஃபைட் போலத்தான். துவக்கத்தில் சறுக்குவது போலத்தான் இருக்கும். ஆனால் அதன் பிறகு இறங்கியடிப்பவர் அமர்க்களமாக ஃபினிஷிங் செய்வார். 

கடந்த ஐந்து ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் ஒரு பர்ஷனல் பஞ்சாயத்துக்காக அமைச்சரவையிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட செங்கோட்டையன் கிட்டத்தட்ட செல்லா காசு போலத்தான் நடத்தப்பட்டார். சசி டீம் அவரை சொல்லி வைத்து கார்னர் செய்தது. அ.தி.மு.க. அரசாளும்போது செங்கோட்டையன் அமைச்சராக இல்லையென்றால் ஏதோ கொலை விழுந்த வீடு போலதான் இருக்கும் கொங்கு மண்டலம். காரணம், அந்தளவுக்கு மக்கள் செல்வாக்கையும், கட்சியினரின் அன்பையும் பெற்ற மனுஷன். 

கோபி அருகே குள்ளம்பாளையத்தில் அவரது கார் புறப்படுகிறது என்றால் கச்சேரிமேடு பகுதியில் சிகரெட்டை அணைத்துவிட்டு, கரைவேஷ்டியை சீராக்கி கட்டியபடி பவ்யமாக வளைந்து நிற்பார்கள் கட்சிக்காரர்கள். கொங்கு மண்டலத்தை பொறுத்தவரையில் செங்கோட்டையைன் ஒரு கறுப்பு எம்.ஜி.ஆர்.தான். 

பந்தாவில் மட்டுமில்லை காரியத்திலும் ‘கன்’ பார்ட்டி மனிதர். இவரும் சு.முத்துசாமியும் அமைச்சர்களாக இருந்தபோது ஈரோட்டை ஒரு தரமான மாவட்டமாக கட்டி எழுப்பினார்கள். தமிழக போக்குவரத்து துறை சில பல படிகள் முன்னேறி நிற்கிறதென்றால் அதற்கு செங்கோட்டையன் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செய்த காரியங்களும் முக்கிய காரணம். 

இப்பேர்ப்பட்ட செங்கோட்டையனைத்தான் மட்டம் தட்டி உட்கார வைத்திருந்தது சசி டீம். கடந்த ஆட்சியின் துவக்கத்தில் அம்மாவால் பிடுங்கப்பட்ட அமைச்சர் பதவியை நிச்சயம் அவர் திரும்பவும் தருவார் என்று பெரிதாய் நம்பினார் செங்கோட்டையன். ஆனால் கடைசி வரை அவரை ஜெயலலிதாவின் கண்ணிலேயே படாமல் பார்த்துக் கொண்டது சசி அண்ட் கோ. தேர்தல் பிரச்சார காலங்களில் ஜெயலலிதாவின் சாரதியாக செல்லும் செங்கோட்டையனை தமிழ்நாடு முழுக்க போலீஸ் உயரதிகாரிகள் வந்து வணங்கிவிட்டு செல்வார்கள்.

ஆனால் அவரது அமைச்சர் பதவி பிடுங்கப்பட்ட நிலையில், கோத்தகிரியில் ஜெயலலிதா தலைமையில் கழக ஆண்டுவிழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றவர்களை குன்னூர் வழியாக சுற்றிப் போக ஆணையிட்டது போலீஸ். அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலையை பிடிக்க முயன்ற செங்கோட்டையனின் காரை வழிமறித்த டி.எஸ்.பி. ஒருவர் ‘உங்களுக்கு ஸ்பெஷல் பர்மிஷன் தரமுடியாது சார். எல்லாரும் போற மாதிரியே போங்க.’ என்று மறித்தபோது செங்கோட்டையன் காரை விட்டு இறங்கி அவரிடம் ப்ளீஸ் செய்து பேசிப்பார்த்ததை கடந்து செல்லும் அ.தி.மு.க நிர்வாகிகள் கண்டு அரண்டார்கள். 

இந்த எளிமைதான் செங்கோட்டையனின் வெற்றியின் ரகசியம். தொகுதிக்குள் கட்சிக்காரர் வீட்டு துக்க நிகழ்ச்சி எதையும் விடமாட்டார் போய் நின்றுவிடுவார். அதேபோல் யார் திருமண பத்திரிக்கை கொடுத்தாலும் கட்சி பேதமில்லாமல் போய் கலந்து கொண்டு வாழ்த்தி, ’கனமாக’  மொய் செய்துவிட்டும் வருவார். கே.ஏ.எஸ். தங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்பதற்காகவே பதினைந்து வயது பையனுக்கு கூட காதணி விழா நடத்திடும் மக்கள் கோபிசெட்டிப்பாளையம் மக்கள்.

இப்பேர்ப்பட்ட செங்கோட்டையனை அடக்கி ஒடுக்கிய சசி டீம், ஜெ., மறைவிற்கு பின் கட்சி கண்டதுண்டமானபோது விரும்பி அழைத்து முன்னிலைப்படுத்தியது, இறங்கி வந்து அமைச்சர் பதவி கொடுத்தது. காரணம் கை நழுவி போகும் அரசியல் சூழலை எந்த ரூட்டில் இறங்கி அடித்தால் மீண்டும் கேட்ச் செய்யலாம் என்பதை துல்லியமாக போட தெரிந்த கில்லாடி அரசியல்வாதி அவர். 

இத்தனை நாட்களாக தன்னை ஒதுக்கியவர்கள், இறங்கி வந்து கெஞ்சுகிறார்களே என்று கெத்து காட்டவில்லை செங்கோட்டையன். புன்னகை முகத்துடன் ஏற்றுக் கொண்டு அடுத்த நொடியே கட்சியை சீரமைக்கும் பணியில் இணைந்தார். கூவத்தூர் விவகார சமயத்திலும், கல்வித்துறை அமைச்சராக பதவியேற்று துவக்கத்தில் சற்றே சொதப்பிய போதும், செங்கோட்டையன் சந்தித்த ஏளனங்கள் ஏராளம். 

ஆனால் அத்தனையையும் பொறுமையாக ஏற்றுக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கி இன்று பள்ளிக் கல்வித்துறையில் பட்டாசு கிளப்புகிறார் என்றால் அதுதான் செங்கோட்டையன். பிளஸ் டூவுக்கு கிரேடு சிஸ்டம், அரசு பள்ளிகளை தனியார் நிறுவனங்கள் தத்தெடுத்தல், பிளஸ் 1_க்கும் பொதுத்தேர்வு என்று பள்ளிக் கல்வி துறையில் உருப்படியான திட்டங்களை அவரால் உருவாக்கப்பட்டிருக்கும் அறிவார்ந்த அதிகாரிகள் குழு துல்லியமாக முடிவெடுக்கிறது. அதை ஊக்குவித்து உற்சாகப்படுத்துவது சாட்சாத் செங்கோட்டையனே. கல்வி அமைச்சரான அவரை துவக்கத்தில் ஏளனித்தவர்களெல்லாம் இப்போது வாயார புகழ்கிறார்கள். 

இழுத்துக் கொண்டே போகுமோ என்று அஞ்சப்பட்ட பஸ் ஸ்டிரைக் விவகாரத்தில் மூக்கை நுழைத்த மாத்திரத்தில் பேசும் விதமாக பேசி போராட்டத்தை வாபஸ் வாங்க வைத்து சைலண்டாக ஸ்வீட் ஷாக் கொடுத்தார் செங்கோட்டையன். 

பரம்பரை பொலிடீஸியனான இவர் முன்னே ஏதோ அலையில் அமைச்சரானவர்கள் ஏக படம் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களை தனது சாணக்கியத்தனமான அரசியல் வேலைகளால் மிரள வைத்திருக்கிறார் செங்ஸ். 

இப்போது இரண்டு அணிகளின் இணைப்பை முன்னின்று நடத்தும் பொறுப்பை செங்கோட்டையனிடமே வழங்கலாமா என்று இருதரப்பு அ.தி.மு.க.வையும் யோசிக்க வைத்திருக்கிறார். 

எடப்பாடி முதல்வராக இருந்தால் என்ன? செயல்புயலாக இருக்கும் செங்கோட்டையனுக்குத்தான் மக்கள் மத்தியில் செல்வாக்காம்!

PREV
click me!

Recommended Stories

6 மணி நேரம்.. விடாத அதிகாரிகள்.. சிபிஐ முன் செந்தில் பாலாஜி சொன்ன 'அந்த' ரகசியம்!
ஒரு வேட்பாளர் எத்தனை லட்சம் செலவு செய்யலாம்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட லிஸ்ட் இதோ!