7 ஆண்டுகால அரசுப் பணி கனவில் மண்ணை அள்ளிப் போட்ட அமைச்சர்..!! சுக்குநூறாக உடைந்த 80 ஆயிரம் பேர் இதயம்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 2, 2020, 2:26 PM IST
Highlights

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 6 லட்சத்து 14 ஆயிரம் நூல்கள் உள்ளன மத்திய அரசு அறிவிக்கும் பொது தேர்வுகள் சிவில் தேர்வுகள் ஆகியவற்றை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பிரிவுகளும்  இனி இங்கு செயல்பட தொடங்கும் என்றார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று 7 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு தேர்வு எழுதிவிட்டு வேலைக்காக காத்திருப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.  

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையிலும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் மேற்கொண்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்ணா நூலகம் வருகைதந்தார். அப்போது ஆய்வு மேற்கொண்ட அவர்  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-  

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 6 லட்சத்து 14 ஆயிரம் நூல்கள் உள்ளன மத்திய அரசு அறிவிக்கும் பொது தேர்வுகள் சிவில் தேர்வுகள் ஆகியவற்றை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பிரிவுகளும்  இனி இங்கு செயல்பட தொடங்கும் என்றார். கடந்த ஆண்டை காட்டிலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது என்ற அவர், இதுவரை 10 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக கூறினார்.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்ற அவர்,  அதைப் பற்றி யோசிக்கும் சூழல் தற்போது இல்லை என்றார். அதேபோல் 2011, 2013, 2014,  2019 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டன. அதில் தமிழகத்தில் நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் பங்குபெற்று வெற்றி பெற்ற சுமார் 80 ஆயிரம் பேருக்கு தகுதி சான்றிதழ், அதாவது 7 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்றும், அதற்குள் அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. 

ஆனால் அவர்களுக்கான 7 ஆண்டு காலம் நிறைவுள்ள நிலையில், இது குறித்து தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்து ஏழு ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு, மீண்டும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படாது என கூறியுள்ளார். மீண்டும் அவர்கள் ஒரு தகுதி தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து தேர்வு எழுதி வேலைக்காக காத்திருப்போர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசு விதிமுறைகளை மீறி கட்டண வசூலில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். 

 

click me!