நிரூபித்தால் பதவி விலக தயார்... மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி அதிரடி சவால்..!

By vinoth kumarFirst Published Dec 14, 2019, 3:59 PM IST
Highlights

2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளில் ஆற்று மணல் அல்லது எம்-சாண்ட் கலந்த சிமெண்ட் கலவை மூலம் ரூ.1,164 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், ரூ.32 கோடி மதிப்பிலான பணிகளுக்கு மட்டுமே எம்-சாண்ட் பயன்படுத்தப்பட்டது, இதில் எப்படி ரூ.1,000 கோடி முறைகேடு செய்ய முடியும் என அமைச்சர் எஸ்பி வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் இன்றே என் பதவியை ராஜினாமா செய்ய தயார் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சவால் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில்;- அதிமுக அரசில், உள்ளாட்சித் துறையின் ஊழல்கள், மக்கள் மன்றம் மூலம் நீதி மன்றம் வரை அணிவகுத்து நிற்கின்ற இந்த நேரத்தில், சென்னை மாநகராட்சியில், ஆற்றுமணலுக்குப்பதில் எம்சாண்ட் பயன்படுத்தியதில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. மேலும், உள்ளாட்சித் துறையை நாசம் செய்துள்ள இமாலய ஊழல்களுக்கு அமைச்சர் வேலுமணி மட்டுமல்ல, அத்துறையில் இதற்குத் துணை போகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் காலமும் வந்தே தீரும்! அது போன்ற ஊழல் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்றார். 

இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு மீது களங்கம் சுமத்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் மு.க.ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக கூறியுள்ளார். மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டது போல் அல்லாமல், ஆற்றுமணலை விட எம்-சாண்டின் விலை அதிகம் என குறிப்பிட்டுள்ள அமைச்சர், அதற்கான விலை நிலவரத்தையும் தெரிவித்துள்ளார்.

2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளில் ஆற்று மணல் அல்லது எம்-சாண்ட் கலந்த சிமெண்ட் கலவை மூலம் ரூ.1,164 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், ரூ.32 கோடி மதிப்பிலான பணிகளுக்கு மட்டுமே எம்-சாண்ட் பயன்படுத்தப்பட்டது, இதில் எப்படி ரூ.1,000 கோடி முறைகேடு செய்ய முடியும் என அமைச்சர் எஸ்பி வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் எந்த அளவுக்கு தன்னை தரம் தாழ்த்திக்கொள்கிறார் என்பதை இதன் மூலம் மக்கள் புரிந்து கொள்ள முடியும். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திராணியற்று உச்சநீதிமன்றத்தின் படிகளில் பலமுறை ஏறிய பின்பும் தோற்ற ஒருவர் எம். சாண்ட் மணலை கயிறாக திரித்து கட்டுக்கதை கட்டி வருகிறார். சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் முறையாக ஆன்லைன் மூலம் கோரப்படுகிறது. 

சென்னை மாநகராட்சி பணிகள் குறித்து தனக்கே உரித்தான 'வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ' பாணியில் புளுகுமூட்டை புரளிகளை அவிழ்த்துவிட்டு அறிக்கைப்போர் தொடுக்கிறார். மேலும், குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் நிரூபித்தால் தாம் பதவி விலக தயார் எனவும், அவ்வாறில்லை எனில் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

click me!