
தமிழகம் பேரிடர்களை சந்தித்து கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் போதெல்லாம் ஸ்டாலின் தமிழகத்தில் இருக்கமாட்டார் என உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி விமர்சித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில், மழை பாதிப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, குடிநீர் சுத்திகரிப்பு திட்டம் குறித்து அறிய ஆஸ்திரேலிய பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்துறை சார்பிலான இந்த பயணம் 3 மாதத்திற்கு முன் அதிகாரிகள் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது. வட கிழக்கு பருவமழை காரணமாக இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது என்றார்.
இதையடுத்து ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்தை விமர்சித்தார். கடந்த 2016-ம் ஆண்டு வர்தா புயல் வந்தபோது ஸ்டாலின் தமிழகத்தில் இல்லை. அதேபோல் தற்போது கனமழையால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் ஸ்டாலின் இங்கு இல்லை. எப்போதெல்லாம் தமிழகம் பேரிடர்களால் பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ஸ்டாலின் தமிழ்நாட்டில் இருப்பதில்லை என அமைச்சர் வேலுமணி விமர்சித்தார்.
ஷார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக ஸ்டாலின், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.