
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.
சென்னை மாநகரின் மத்திய பகுதிகளிலும் முக்கியமான பகுதிகளிலும் தேங்கிய நீரை வெளியேற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்றன. அதே நேரத்தில் சென்னை புறநகர்ப் பகுதிகளான முடிச்சூர், கோவிலம்பாக்கம், சிட்லபாக்கம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆய்வு செய்யவும் 15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா ஆகியோர் மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்துவருகின்றனர். இன்று காலையில்கூட ஐஏஎஸ் அமுதா தலைமையில், மணிமங்கலத்தில் வெள்ளத்தால் வெளிவரமுடியாமல் தவித்த இரண்டு கர்ப்பிணி பெண்கள் மீட்கப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில் மழை பாதிப்பு அதிகமாக இருப்பதால் மீட்பு பணிகளை ஆய்வு செய்ய கூடுதலாக 7 ஐஏஎஸ் அதிகாரிகளை வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் நியமித்துள்ளார்.
பிரவீன் நாயர், அருண் தம்புராஜ், கண்ணன், ஆனந்த் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் 961 ஏரிகள் உள்ளன. ஏரிகள் நிரம்பி தண்ணீர் வெளிவந்தால் அருகாமையிலுள்ள ஊர் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அப்படி அவர்கள் பாதிக்கப்படாமல், முன்னெச்சரிக்கையாக அவர்களை பாதுகாப்பாக மீட்டு அவர்களுக்கான தங்கும் மற்றும் உணவு வசதிகளை ஐஏஎஸ் அதிகாரிகள் ஏற்படுத்தி தருவார்கள் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.