உங்களுக்கு சந்தேகம்னா என்கூட வாங்க! நேரடியாக சென்று ஆய்வு செய்வோம்! இபிஎஸ்-ஐ அலறவிடும் அமைச்சர் மா.சு.!

By vinoth kumarFirst Published Nov 15, 2023, 6:34 AM IST
Highlights

எத்தனை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நீங்களோ அல்லது உங்கள் அமைச்சர் அவர்களோ சென்றிருக்கிறீர்கள், நாங்கள் எத்தனை முறை இதை செய்திருக்கின்றோம் என்று தெரிந்து கொண்டு, இதுகுறித்து எங்களிடம் நேரிடையாக விவாதிக்க தயாரா.

எடப்பாடி பழனிச்சாமிக்கு மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறது என்ற சந்தேகம் இருக்குமேயானால் வாருங்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்வோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது என்கின்ற வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு நான் அவரிடம் தட்டுப்பாடு எங்கு நிலவுகிறது என்று தெரிவித்தால், அதனை நிவர்த்தி செய்து தருவதாகவும் தெரிவித்திருந்தேன். மேலும், தமிழ்நாடு மருந்து சேவை கழகத்தின் மூலம் (Tamilnadu Medical Service Corporation) தமிழ்நாட்டில் மருந்துகள் இருப்பு நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் இன்றும் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் சிறந்த செயல்பாடுகளின் காரணமாக தமிழ்நாடு மருத்துவத் துறை பல்வேறு விருதுகளை கடந்த ஓராண்டாக வாங்கி வருகிறது. 2013ஆம் ஆண்டு முதல் தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது (NQAS – National Quality Assurance Standards Certificate) வழங்கப்பட்டு வருகிறது. 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மொத்த விருதுகள் எண்ணிக்கை 549 ஆகும். ஆனால் கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டிற்கு கிடைத்த விருதுகள் எண்ணிக்கை 310 ஆகும்.

அதே போல் மகப்பேறு அறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்ட சான்றிதழ் (LaQshya – Labour Room Quality Improvement Initiative) 2017 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் கீழ் 6 ஆண்டுகளில் பெறப்பட்ட ஒட்டு மொத்த சான்றிதழ்கள் 79 ஆகும். இதில் இந்த ஆண்டு மட்டும் 45 சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. இதனை எடப்பாடி பழனிச்சாமி தெரிந்துக்கொள்ள வேண்டும்.இதையும் படிங்க;- மருந்துகள் வாங்க நாளை வருங்கள்; அடுத்த வாரம் வாருங்கள் என ஏழை மக்கள் அலைக்கழிப்பு.! திமுக அரசை விளாசும் இபிஎஸ்

 

மேலும், அவர் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நான் முன்னரே கூறியது போல் நீங்கள் 10 ஆண்டுகளில் இந்த மாநிலத்தில் எத்தனை முறை சுற்றி வந்திருக்கிறீர்கள், எத்தனை மலைக்கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறீர்கள், எத்தனை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நீங்களோ அல்லது உங்கள் அமைச்சர் அவர்களோ சென்றிருக்கிறீர்கள், நாங்கள் எத்தனை முறை இதை செய்திருக்கின்றோம் என்று தெரிந்து கொண்டு, இதுகுறித்து எங்களிடம் நேரிடையாக விவாதிக்க தயாரா.

ஆகையால் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய நீங்களோ அல்லது உங்களை சார்ந்த ஒருவரோ சட்டமன்றம் நடக்கும்போது இதுகுறித்து பேசலாம். சட்டமன்றம் நடக்காதபோது எங்கேயோ ஒரு இடத்தில் ஒளிந்துக்கொண்டு பேசுவது எதிர்கட்சித் தலைவர் அவர்களுக்கு அழகல்ல. எடப்பாடி பழனிச்சாமி மருந்து மாத்திரைகள் 30 நாட்களை கடந்தும் இல்லை என்று அறிக்கை விட்டு இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) என்று சொல்லக்கூடிய தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு வருடத்திற்கும் எவ்வளவு மருந்துகள் வாங்கப்படுகிறது என்று பார்த்தோமேயானால் 313 அத்தியாவசிய மருந்துகள் வாங்கப்படுகிறது, 234 வகையான மருத்துவ அறுவை மற்றும் தையல் உபகரண சாதனங்கள், 326 சிறப்பு மருந்துகள் மற்றும் 7 இரத்தம் உறைதல் சம்பந்தப்பட்ட மருந்துகள் அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டு ஏழை மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பொது சுகாதார இயக்குநரகத்தின் சார்பில் பூச்சிக் கொல்லி சம்பந்தமான மருந்துகள் வாங்கித்தரப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகள் ஒவ்வொரு ஆண்டும் அதன் தரத்தை நிர்ணயம் செய்து எவ்வளவு தேவை என்று குறிப்பிடப்பட்டு வாங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மருந்து கிடங்குகள் உள்ளது. இந்த 32 மாவட்டங்களில் உள்ள மருந்து கிடங்குகள் மூலம் ரூ.326.92 கோடி மதிப்பீட்டில் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் புதியதாக 6 மாவட்டங்களிலும் மருந்து கிடங்குகள் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். கொள்முதல் செய்யப்பட்டுள்ள மருந்துகள் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்பட்டு, தற்போது கையிருப்பில் உள்ள மருந்துகள் தொகை ரூ. 240.99 கோடி ஆகும். இதற்கு பிறகும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறது என்ற சந்தேகம் இருக்குமேயானால் வாருங்கள், நானும் உடன் வருகிறேன், நேரடியாக சென்று ஆய்வு செய்வோம்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக நான் ஏற்கெனவே பேசியிருக்கிறேன். மருத்துவர்கள் பணியிடங்கள் 1021, மருந்தாளுநர் பணியிடங்கள் 986, சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் 1,066, கிராம சுகாதார செவிலியர்கள் 2,222 மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற பல்வேறு வழக்குகள் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கலாம். அதுதொடர்பாக விவாதம் செய்ய தயாராகவே உள்ளோம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

click me!