முதல்வர் மு.க ஸ்டாலினின் விடியல் ஆட்சியில், விடியல் நகர் உருவாக்கப்படும் என்று பேசியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள், ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதற்கு சிரமப்படுவதை அடுத்து மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலி ஏற்பாடு செய்தார். அதனைத் தொடர்ந்து மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் நாட்களில் இலவச ஆட்டோ ஏற்பாடு செய்திருந்தார் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர். மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கோரிக்கையை அடுத்து மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தனது வி.செந்தில்பாலாஜி ஃபவுண்டேஷன் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மாற்றுத்திறனாளிகளுக்காக பேட்டரி கார் அளித்தார்.
undefined
இதன் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு நடைபெற்றது. தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேட்டரி கார் சேவையைப் பச்சைக்கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.இதில் வாங்கலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ப்ரீத்திக்கு இலவச வீட்டிற்கான ஆணை மற்றும் 136 பேருக்கு ரூ.12.96 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், ‘மாற்றுத்திறனாளிகள் யாருடைய துணையுமின்றி வாழ்ந்திட வேண்டும். அந்த நிலையை எட்டுகின்ற நாள்தான் மகிழ்ச்சியான நாளாகும். அந்த நாளை விரைவில் எட்டிட முடியும். மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில் முதல்வர் உத்தரவின்பேரில் முதன்முதலாக விடியல் வீடு என்ற பெயரில் பார்வையற்றவர்கள் யாருடைய உதவியுமின்றி தாங்களே வசிக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
2 மாதங்களில் இந்த வீடுகள் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும். கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வசிப்பதற்காக தனியாக விடியல் நகர் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி யாரெல்லாம் வீடுகள் வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்களோ அவர்களுக்கு வீடுகள் கட்டி வழங்கப்படும். அந்த வீடுகள் வழக்கமான அடிப்படைக் கட்டமைப்பு கொண்டதாக மட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிகள் வசிக்க ஏதுவாக வடிவமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டு எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் யாருடைய உதவியுமின்றி தன்னந்தனியாக வசிக்கக்கூடிய வகையில் வடிவமைப்பு உருவாக்கப்படும்.
இதற்காக பிச்சம்பட்டி, மணவாடி ஆகிய இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விரைவில் எந்த இடம் எனத் தேர்வு செய்து விரைவில் விடியல் நகர் தொடங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சொந்த இல்லத்தில் வசிக்கவேண்டும் மாற்றுத்திறனாளிகள் யாரும் எந்த உதவிக்காக யாரிடத்திலும் கேட்டுவிடக் கூடாது. அனைத்தையும் அரசே செய்யும்’ என்று கூறினார்.