சுயவிளம்பரத்துக்காக போராட்டம் செய்யும் ஜோதிமணி.. செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்..

By Narendran SFirst Published Dec 4, 2021, 1:35 PM IST
Highlights

கரூர் நாடாளுமன்ற  உறுப்பினர் ஜோதிமணி தன் இருப்பைக் காட்டுவதற்கும், சுய விளம்பரத்துக்காகவும் மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு வைப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சித்துள்ளார். 

கரூர் நாடாளுமன்ற  உறுப்பினர் ஜோதிமணி தன் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு வைப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துளார். முன்னதாக கரூர் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினரான தன்னை மக்கள் பணி ஆற்ற விடாமல் மாவட்ட ஆட்சியர் தடுப்பதாகவும், மேலும் மற்ற மாவட்டங்களில் திமுக எம்பி கனிமொழி இருந்த அந்த நாடாளுமன்றத் தொகுதியில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் கரூர் மாவட்டத்தில் கமிசன் அடிப்படையில் ஒரே நோக்கத்திற்காக மட்டுமே, இந்த திட்டம் மூலமாக வரக்கூடிய பொது மக்களுக்கு கிடைக்கக்கூடிய உபகரணங்களை கிடைக்கவிடாமல் மாவட்ட ஆட்சியர் தடுப்பதாக ஜோதிமணி குற்றம்சாட்டினார். ”ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்திடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க ADIP முகாம் நடத்த வேண்டும் என்று கேட்டு பெற்று வந்தேன். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆட்சியர்கள் முகாம் நடத்தும்போது ஏன் கரூர் மாவட்ட ஆட்சியர் நடத்தவில்லை? இதே முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து நடத்தியுள்ளார்” என்று ஜோதிமணி கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி, “கரூர் தமிழ்நாட்டில் தானே உள்ளது? மேலும், இந்த சிறப்பு முகாம் நடத்த கோரி கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியும் அவர் கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கப்படும் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தடுத்து வருவதாகவும் உடனடியாக இந்த சிறப்பு முகாம் எப்போது நடத்தப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே இந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவேன்” எனக் கூறி தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஈடுபட்டார். இந்த நிலையில் கரூர் நாடாளுமன்ற  உறுப்பினர் ஜோதிமணி தன் இருப்பைக் காட்டிக் கொள்வதற்கும், சுய விளம்பரத்துக்காகவுமே மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு வைப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துளார். 

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலந்துகொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகை மின் மாநிலம் என்று கூறியவர்கள் நாலரை லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியில் ஆறு மாதங்களில் 1 லட்சம் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் விவசாயத்திற்கு கட்டணம் மூலம் மின்சாரம் பெற்று வந்த பூந்தோட்ட மின் இணைப்பு பெற்றவர்களுக்கு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இலவச மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் மேலும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒரு சிலர் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் மீதும், மாவட்ட ஆட்சியர் மீதும் குற்றச்சாட்டு வைக்கின்றனர் என்று தெரிவித்தார். எழுத்துப்பூர்வமாக் முகாம் நடத்த அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் ஜோதிமணி கோரியிருந்தால் அதை காட்டட்டும் என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து உதவிகளும் கலெக்டர் அலுவலகத்தில் உடனுக்குடன் கிடைப்பதாகவும் அவர் கூறினார். காழ்ப்புணர்ச்சியாலோ அல்லது சுய விளம்பரத்துக்காகவோ சிலர் இது போல வீண் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக செந்தில் பாலாஜி விமர்சித்தார். கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸை சேர்ந்த எம்.பியும், திமுக அமைச்சரும் இப்படி வார்த்தை மோதல்களில் ஈடுபடுவது கூட்டணி உறவில் விரிசல் ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

click me!