
காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம், அதிமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் நேற்று காலிங்கராயன் பாளையத்தில் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இன்னும் ஒரு வருடத்தில் கடன் சுமையே இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்கவும், ப்ளஸ் டூ முடித்த உடனேயே அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கின்ற வகையிலும் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
வருங்காலத்தில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் புத்தகங்களை எடுத்துச்செல்லாமல் 'டேப்' எனப்படும் கருவி மூலம் பாடங்களை டவுன்லோடு செய்து படிக்க, 50 லட்சம் மாணவர்களுக்கு 'டேப்லெட்' கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும் பேசிய அவர், நம்முடைய மாநிலத்தில் ஓடும் நதிகள் கர்நாடக மாநிலம், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உருவாகின்றன. எனவே, நமக்கு வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்குப் பல தடைகள் இருக்கிறது. தண்ணீர் கேட்டு வேண்டுகோள் வைத்தாலும், பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கிறது. பேச்சுவார்த்தையின் மூலமாகவும் முடிவுகள் எட்டப்பட முடியவில்லை.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, சட்டப் போராட்டத்தை நடத்தி இந்த தமிழ்நாட்டு மண்ணிலே வாழ்கின்ற மக்களுக்கு தண்ணீரைப் பெற்றுத் தருவதுதான் என்னுடைய லட்சியம் என்று குறிப்பிட்டார். அதைக்கூட தி.மு.க தலைவர் கருணாநிதி, என்னது சட்டப் போராட்டமா! நடத்தி ஜெயித்து விடுவீர்களா என கிண்டலாக பேசினார். அது மட்டுமல்லாமல் திமுக தலைவர் கருணாநிதி பேசியதை அவரது குரலிலேயே மிமிக்ரி செய்தார் அமைச்சர் செங்கோட்டையன்.
காவிரி உரிமையைப் பெற்றதற்கு அன்றைக்கு அம்மா நடத்திய சட்டப்போராட்டம்தான் காரணம். நாம் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சாவைத் தேடிக் கொண்டிருக்கின்றனர் என்றும் சாவை வைத்து அரசியல் செய்து வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கடுமையாக சாடியுள்ளார்.