2221ல் அதிமுக ஆட்சியமைக்கும்போது கருணாநிதி வாழ்த்த வேண்டும்!! அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேச்சு

First Published Jul 29, 2018, 1:16 PM IST
Highlights
minister sellur rajus next controversial speech


திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டும் என தனக்கே உரிய பாணியில் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ. 

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் மோசமடைந்ததால், சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். வயது முதிர்வின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக திமுக தலைவர் கருணாநிதி அரசியலிலிருந்து ஒதுங்கி சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மோசமானதை அடுத்து நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் கருணாநிதியின் தனி மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு ஆகியவை இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறப்பட்டது. தொடர்ந்து கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கருணாநிதியின் உடல்நலம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு சென்று விசாரித்துவருகின்றனர். இன்று காலை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலத்தை விசாரித்தார். 

கருணாநிதி உடல்நலம் பெற வேண்டும் என அதிமுகவினரும் அமைச்சர்களும் விருப்பம் தெரிவித்தனர். கருணாநிதியின் உடல்நலம் குறித்த தகவல் பரவிய அன்றே துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். 

இந்நிலையில், கருணாநிதி உடல்நலம் பெற வேண்டும் என தனக்கே உரிய பாணியில் பேசி இப்போதும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ. அமைச்சர் செல்லூர் ராஜூ அவ்வப்போது பேசுவதெல்லாம் சர்ச்சையாக கிளம்புவது வழக்கமாகிவிட்டது. 

மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக 2221லும் ஆட்சியமைக்கும். கருணாநிதி நலமுடன் இருந்து அதை பார்த்து அதிமுகவை வாழ்த்த வேண்டும் என பேசியுள்ளார். கருணாநிதி நலம்பெற வேண்டும் என்பதையே அமைச்சர் அவ்வாறு பேசியுள்ளார். 2221 என தவறுதலாக கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்னர் 2021 என்பதைத்தான் மாற்றி கூறிவிட்டதாக விளக்கமளித்தார். 

எனினும் அவரது பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 
 

click me!