
மழைக்காலம் என்று வந்துவிட்டால் டெங்கு போன்ற காய்ச்சல்கள் வருவது இயல்பு தான் என்றும், இது ஒரு பிரச்சனையே இல்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 1 மாத காலமாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாசிலம் முழுவதும் பரவி வரும் டெங்குவை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.
ஒவ்வொரு நாளும் 10 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் மருத்துவ குழுவினரும், மத்திய இணை அமைச்சர் அஸ்வின் குமாரும் தமிழகம் வந்து டெங்கு குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் மதுரையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர், கூடுதல் ஆட்சியர் அம்ரித், எம்.பி., கோபாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,க்கள், டி.ஆர்.ஓ., குணாளன், வன அலுவலர் சமர்தா பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, மழைக் காலம் என்று வந்தால் டெங்கு போன்ற காய்ச்சல்கள் வருவது சகஜம் தான் என்று தெரிவித்தார். இது ஒரு பிரச்சனையே அல்ல என்றும் தெரிவித்த செல்லூர் ராஜு, டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடிவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்றும், தானாக மருந்து எடுத்துக் கொள்வது மிகத் தவறானது. என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கேட்டுக் கொண்டார்.
டெங்கு காய்ச்சலால் தமிழகமே பீதியில் ஆழ்ந்துள்ள நிலையில் அமைச்சரின் இந்த பேச்சு பொது மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.