
எம்ஜிஆர் காலம் முதல் தற்போது வரை திமுகதான் எங்களது எதிரி என்றும், விஷால் எல்லாம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளர்ன், அவர் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்தததையடுத்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக,பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன.
இந்நிலையில் நடிகர் விஷால் திடீரென தேர்தலில்போட்டியிடப்போவதாக அறிவித்து நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது. அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் விஷால், தனக்காக வேட்பு மனுவில் கையெழுத்துப்போட்டவர்களை ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனனின் ஆட்கள் மிரட்டியதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இரவு 10 மணிக்கு திடீரென அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஷால், இங்கு என்ன நடக்கிறது என்பதே தெரிவில்லை என புலம்பினார். தன்னைக்கண்டு அரசியல் கட்சிகள் ஏன் பயப்படுகின்றன? என அவர் கேள்வி எழுப்பினார். மதுசூதனனின் ஆட்கள்தான் தனக்கு ஆதரவாக கையெழுத்திட்டவர்களை மிரட்டுவதாக தெரிவித்திருந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் செல்லூர் ராஜு, நடிகர் விஷாலுக்கெல்லாம் அதிமுக பயப்படவேண்டிய அவசியமில்லை என கூறினார். அவர் எம்ஜிஆர் காலம் முதல் தற்போது வரை திமுகதான் எங்களது எதிரி என்றும், விஷால் எல்லாம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளர்ன், அவர் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என விளாசித் தள்ளினார்.