
ஜெயலலிதாவின் பேச்சை மதிக்காமல் தற்போதைய ஆட்சியாளர்கள், பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டதை ஒப்புக்கொள்ளும் வகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக, மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே பல்வேறு சம்பவங்களும் அரங்கேறின.
தழிழகத்தில் யார் முதல்வராக வேண்டும் என்பதில் தொடங்கி அதிமுகவை யார் வழிநடத்த வேண்டும் என்பதுவரை அனைத்தையுமே பாஜக தலைமை தீர்மானிப்பதாக எழுந்த விமர்சனங்களை உறுதிப்படுத்தும் வகையில்தான் நிகழ்வுகள் அமைந்தன. இவ்வாறு, அதிமுக என்ற கட்சியிலும் தமிழகத்தின் ஆட்சியிலும் மறைமுகமாக பாஜக ஆதிக்கம் செலுத்துவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு, இடைத்தேர்தல் அறிவிப்பு என அனைத்துமே எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்துவதாகவே இருந்தன.
இதற்கிடையே ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு ஆர்.கே.நகரில் தினகரனிடம் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் பலரும், சில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் என பலரும் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க உள்ளதாக எழுந்துள்ள தகவல்களால் அதிமுகவில் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கலக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டதுதான் ஆர்.கே.நகரில் அதிமுகவின் தோல்விக்குக் காரணம். பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கான தண்டனையை அனுபவித்துவிட்டோம். இனிமேல் பாஜகவுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என ஜெயலலிதா தெரிவித்திருந்தார். அந்த நிலைப்பாட்டை தற்போது எடுக்க உள்ளோம். இனிமேல் பாஜகவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
பாஜகவுடன் இனி ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டை ஜெயலலிதா எடுத்திருந்ததாகவும் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டதால்தான் ஆர்.கே.நகரில் தோற்றதாகவும் அமைச்சர் கூறியதிலிருந்தே ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை செயல்படுத்த தற்போதைய ஆட்சியாளர்கள் தவறிவிட்டதை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை மதிப்பதென்றால், பாஜகவுடன் இணக்கமாகவே இருந்திருக்கக் கூடாது அல்லவா? பாஜகவுடன் இணக்கமாக இருந்ததால்தான் ஆர்.கே.நகரில் தோற்றோம் என்ற கூற்று, ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டதை அமைச்சரே ஒப்புக்கொள்வதை உறுதி செய்துள்ளது.