
வடிவேலு இல்லாத குறையை சில அமைச்சர்கள் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்; அந்த கோமாளி அமைச்சர்களுக்கு தலைமை தாங்குவது அமைச்சர் செல்லூர் ராஜூ என தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டதே ஆர்.கே.நகரில் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கான காரணம் எனவும் இனிமேல் பாஜகவுடன் ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றியில் பேசியிருந்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தினகரனின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய வாக்குகளின் வித்தியாசத்தில் ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. அந்த தோல்விக்கான காரணத்தை தெரிவிக்க முடியாமல் ஆட்சியாளர்கள் பிதற்றுகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் அமைச்சர் செல்லூர் ராஜூ போன்ற விஞ்ஞானி அமைச்சர்களின் பேச்சு.
பாஜகவுடன் இனி உறவு கிடையாது என்ற நிலைப்பாட்டை ஆட்சியாளர்கள் எடுப்பார்களேயானால், பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சித்த குருமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து ஏன் கைது செய்யவில்லை? பழனிசாமி அரசு, குருமூர்த்தியின் ஆலோசனையின்படி செயல்படுகிறது என கூறிய என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சித்துள்ள குருமூர்த்தி மீது வழக்கு போட தயங்குவது ஏன்? இன்னும் இந்த ஆட்சியாளர்கள் பாஜகவின் காலடியில்தான் விழுந்து கிடக்கிறார்கள்.
அழிவின் விளிம்பில், அஸ்தமனத்தின் உச்சியில் தள்ளப்பட்டதால் பேசுகிற பேச்சுதான் செல்லூர் ராஜூ பேசுவதே தவிர அவருடைய பேச்சை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. வடிவேலு இல்லாத குறையை சில அமைச்சர்கள் தீர்த்து கொண்டிருக்கிறார்கள். அந்த கோமாளி அமைச்சர்களுக்கு தலைமை தாங்குவது செல்லூர் ராஜூ தான். இவர்களின் பேச்சை தமிழ்நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள் என நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்தார்.