
பட்டின பிரவேச நிகழ்ச்சி சர்ச்சை
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மடத்தில் ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை அன்று பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியின்போது, ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமரவை வைத்து பக்தர்கள் பல்லக்கை சுமந்து வீதியுலா செல்வது வழக்கமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் பல்லக்கில் சுமக்கத் தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டதால், சர்ச்சையான நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இது தொடர்பாக காரசாரமான கருத்துகளை தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில், “தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்! என கூறியிருந்தார்.
நியாயத்திற்கு பல்லக்கு தூக்க வேண்டும்
இதனால் பரபரப்பான சூழல் உருவான நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்த பிரச்சனை தொடர்பாக தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் மண்டல இணை ஆணையர்களுக்கு வாக்கி டாக்கிகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள , இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து சமய அறநிலைய துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட துறை சார்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, முதற்கட்டமாக 20 மண்டல இணை ஆணையர் இரண்டு கூடுதல் ஆணையர் , இணை ஆணையர்களுக்கு 100 வாக்கி டாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த மானிய கோரிக்கையில் 112 அறிவிப்புகள் வெளியிட்டத்தில் 1,690 பணிகளை மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக கணினி வழியில் பூஜைகளை முன்பதிவு செய்வது. திருக்கோயிலின் 4 கோடி ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவித்ததை விட 200 பணிகள் கூடுதலாக மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார்
தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசம் நிகழ்ச்சி 22 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான ரம்யமான சூழல் உருவாகும் எனவும் தமிழகத்தின் மூலவரகாவும் உற்சவராகவும் முதல்வர் திகழ்கிறார். பட்டின பிரவேச விவகாரத்தில் அனைவருக்கும் உகந்த நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் எனவும் தெரிவித்தார். பட்டின பிரவேச நிகழ்வில் நானே பல்லக்கு தூக்குவேன் என்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு,
அண்ணாமலை யாருக்கும் பல்லக்கு தூக்க கூடாது, நியாயத்திற்கு பல்லாக்கு தூக்க வேண்டும் என்றார். திருசெந்தூர் கோயிலில் 1000 ரூபாய் பணம் வாங்கி கொண்டு பக்தர்களை சாமி தரிசனதுக்கு அர்ச்சகர் ஒருவர் அனுப்பும் நிகழ்வு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.