அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் ஆளுநருக்கு யாரை பார்தாலும் அப்படி தெரிகிறது- சேகர்பாபு

By Ajmal KhanFirst Published Jan 22, 2024, 1:54 PM IST
Highlights

 ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அன்னதானம் மற்றும் பஜனை நிகழ்விற்கு தமிழகத்தில் எந்த விதமான தடையும் விதிக்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மேலும் அனைத்து கோயில்களிலும் அனைத்து பக்தர்களும் சுதந்திரமாக வழிபடவும் அவர்கள் விரும்புகின்ற பஜனைப் பாடல்களை பாடவும் அரசும், தமிழக முதல்வரும் எந்த விதமான தடையும் விதிக்கவி்ல்லையென தெளிவுபடுத்தினார். 

ஒரே நாளில் 20 கோயில்களில் குடமுழுக்கு

தமிழகத்தில் இன்று 20 கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்று வருகிறது. இது தொடராக அறிநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்றைக்கு மட்டும் தமிழகத்தில் 20 கோயில்களில் குடமுழுக்கு  நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  இந்த மாத இறுதிக்குள் இன்னும் 31 திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற இருக்கின்றது. மேலும் இன்று  இரண்டு ராமர் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு நகரில் உள்ள கோதண்டராமன் திருக்கோயிலில் இன்றைக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.  அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமடுதூர் வட்டம் உள்ளங்குடி அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவிலுக்கு இன்றைக்கு குடமுழுக்கு நடைபெறுகின்றது.  இந்த ஆட்சியில் தான் அதிகளவு குடமுழக்கு நடைபெறுகிறது.

756 கோயில்களில் அன்னதான திட்டம்

திமுக ஆட்சியில் அறிநிலையத்துறைக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பட்டியலிட்ட அவர்,  பழமையான திருக்கோயில்கள் 100 கோயில்கள் கண்டறியப்பட்டு அந்த 100 கோயில்களுக்கு தல ஒரு கோவிலுக்கு 15 லட்ச ரூபாய் செலவில் தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  திருக்கோயில்களில் போதிய நிதி இல்லாததால் பல திருக்கோயிலில் ஒரு கால பூஜைக்கு கூட முடியாத சூழல் உள்ளதையறிந்து  தமிழக முதலமைச்சர் அவர்கள் கன்னியாகுமரி தேவஸ்தானத்திற்கு ஆண்டிற்கு 8 கோடி ரூபாயை அரசின் சார்பில் மானியமாக வழங்கிக் கொண்டிருக்கின்றார். புதுக்கோட்டை தேவஸ்தானத்திற்கு 6 கோடி ரூபாயை ஆண்டுக்கு மானியமாக வழங்கிக் கொண்டிருக்கின்றார்.  திருக்கோயில்களை பொறுத்த அளவில் 756 திருக்கோயில்களில் இன்றைக்கு ஒருவேளை அன்னதான திட்டம் நடைபெறுகின்றன.  இந்த ஆண்டு தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் கூடுதலாக 7 திருக்கோயில்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

ராமர் கோயில்- எந்த தடையும் விதிக்கவில்லை

மேலும் இன்றைக்கு ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அன்னதானம் மற்றும் பஜனை நிகழ்விற்கு தமிழகத்தில் எந்த விதமான தடையும் விதிக்கவில்லை. அனைத்து கோயில்களிலும் அனைத்து பக்தர்களும் சுதந்திரமாக வழிபடவும் அவர்கள் விரும்புகின்ற பஜனைப் பாடல்களை பாடவும் அரசும் தமிழக முதல்வர் அவர்களும் எந்த விதமான தடையும் யாருக்கும் அளிக்கவில்லை என தெரிவித்தார். இதை தொடர்ந்து ஆளுநர் வெளியிட்ட பதிவு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், ஆளுநர் அவர்கள் காலையிலே சென்ற அந்த திருக்கோயிலில் பரிபூரணமாக ஆளுநருக்கு உண்டான அனைத்து வரவேற்புகளோடு சிகப்பு கம்பளம் விரித்து அவருக்கு சிறந்த முறையில் தரிசனம் செய்யப்பட்டு இருக்கின்றது.  ஆளுநர் கூறியது போல் இந்த ஆட்சியை பொறுத்த அளவில் எந்த விதமான அச்சுறுத்தலும் யாருக்கும் கிடையாது.  

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

என்னுடைய பக்கத்திலே கூட உட்கார்ந்து இருக்கின்றவர் ஒரு பட்டர் தான்.  அச்சுறுத்தல் இருந்தால் அவர் என் பக்கத்திலே அமருவாரா.? என கேள்வி எழுப்பினார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள்,  கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல் ஆளுநருக்கு யாரைப் பார்த்தாலும் அப்படி தோன்றுகிறது போல் இருக்கிறது. எங்காவது வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது என்று மனசாட்சி உள்ள பத்திரிகை நிருபர் சென்று பாருங்கள் அனைத்து திருக்கோயில்களிலும் சுதந்திரமான முறையில் வழிபாட்டுத் தலங்கள் செயல்படுகின்றன அவர் அரசியல் கண்ணோட்டத்தோடு தான் ஆளுநர் கூறியுள்ளாதக சேகர்பாபு தெரிவித்தார். 


 

click me!