
தனியார் பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக குற்றம்சாட்டி வந்தார்.
இதையடுத்து ஹட்சன், டோட்லா, விஜய் பால் நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் தீங்கு விளைவிக்கும் வகையில் தனியார் பாலில் கலப்படம் இல்லை எனவும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவதூறு பரப்ப தடை விதிக்க வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தனியார் பால் நிறுவனங்கள் மீது ஆதாரமின்றி பேசக் கூடாது எனவும், இதுதொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 3 பால் நிறுவனங்களின் பாலை அங்கீகரிக்கப்பட்ட சோதனை கூடங்களில் சோதனை செய்து 3 மாதத்தில் அறிக்கை தரவேண்டும் எனவும் அதுவரை பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.