”நடந்த அத்தனை ரெய்டுகளுக்கும் காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்”...புலம்பும் வேட்பாளர்...

By Muthurama LingamFirst Published Apr 1, 2019, 11:36 AM IST
Highlights

”சுமலதா மற்றும் அவரது கணவருக்கு நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் தான் என் வீடு மற்றும் அலுவலகங்கள் நடந்த வருமான வரித்துறை ரெய்டுகளுக்குக் காரணம்” என்று கர்நாடக மந்திரி ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
 

”சுமலதா மற்றும் அவரது கணவருக்கு நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் தான் என் வீடு மற்றும் அலுவலகங்கள் நடந்த வருமான வரித்துறை ரெய்டுகளுக்குக் காரணம்” என்று கர்நாடக மந்திரி ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

 ரஜினியின் உயிர்நண்பரின் மனைவியான சுமலதா காங்கிரசில் தனக்கு மாண்டியா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்த்தார். அவருக்கு சீட் மறுக்கப்பட்டதால் அதே தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். மாண்டியாவில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் மந்திரி சி.எஸ்.புட்டராஜுவுக்கு சீட் கொடுக்கப்பட்டது.

கடந்த வாரம் கர்நாடக முதல் -மந்திரி குமாரசாமி மாண்டியாவில் நிருபர்களிடம் கூறும்போது, ‘வருமான வரித்துறை அதிகாரிகள் கர்நாடகத்தில் பெரிய அளவில் எங்கள் கட்சி தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்” என்று பரபரப்பு தகவலை வெளியிட்டார். அவர் கூறியதை போலவே அடுத்த நாளே வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர்.

மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள சின்ன குருளி கிராமத்தில் உள்ள புட்டராஜு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மைசூரில் உள்ள அவரது சகோதரரின் மகன்கள் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஹாசனில் பொதுப் பணித்துறை மந்திரி எச்.டி. ரேவண்ணாவின் நெருங்கிய ஒப்பந்ததாரர்களின் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

புட்டராஜு வீடு, உறவினர்கள் வீடுகளில் நடந்த சோதனைகளில் சில முக்கியமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனைகளின்போது, மத்திய போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநில போலீசாரை வருமான வரித்துறை அதிகாரிகள் பயன்படுத்தவில்லை. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வருமான வரி சோதனை குறித்து  நிருபர்களிடம் பேசிய புட்டராஜு,”வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய 3 குழுவினர் எனது வீட்டில் சோதனை நடத்தினார்கள். மத்திய போலீஸ் பாதுகாப்பு படையை சேர்ந்த 8 பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் பின்னணியில் 100 சதவீதம் பா.ஜனதா உள்ளது.பா.ஜனதா ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரான சுமலதா தான் இதற்கு காரணம். அவர் அவரது குடும்ப நண்பர் ரஜினிகாந்த் உதவியுடன் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை தொடர்புகொண்டு எனது வீட்டில் சோதனை நடத்த கேட்டுக்கொண்டுள்ளார். எனவே என் வீட்டில் நடந்த சோதனையில் ரஜினிகாந்துக்கும் தொடர்பு உள்ளது.

சோதனை நடப்பதற்கு முன்பு சுமலதா தனது பிரசாரத்தில் எங்கள் கட்சி தலைவர்கள் விரைவில் சிக்குவார்கள் என்று பேசியதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. அவர்கள் தனியார் ஓட்டலில் அமர்ந்து வாக்காளர்களுக்கு பணம் தருகிறார்கள். அதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

என் வீட்டில் அதிகாரிகள் ரூ.30 ஆயிரம் பணம் எடுத்தனர். அதையும் திருப்பி கொடுத்துவிட்டனர். அம்பரீஷ் இறந்தபோது பாராளுமன்றத்தில் பா.ஜனதாவில் மரியாதை தரவில்லை. தேவகவுடா தலையிட்ட பின்னர் தான் அம்பரீஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதை சுமலதா மறக்க கூடாது.’என்றார் அவர்.

click me!