தமிழ் மொழி தெரிந்தால் மட்டும் தேர்வெழுத வாங்க..! இல்லைனா கோர்ட்க்கு கூட போங்க..!

By Thanalakshmi VFirst Published Dec 4, 2021, 3:04 PM IST
Highlights

போட்டி தேர்வுக்கெனத் தங்களை தயார்படுத்திக் கொண்டு இருக்கும் தமிழ் இளைஞர்களின் தாகம் புரிந்ததாலேயே தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 
 

அனைத்து அரசு தேர்வுகளிலும் இனி தழிழ்மொழி தாள் கட்டாயம் என்று தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்ட நிலையில் , இன்று இதுக்குறித்து அமைச்சர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

இனி வரும் காலங்களில், எந்த தேர்வாக இருந்தாலும் அடிப்படை தமிழ்மொழி அவசியம் என்றும் தமிழ், தமிழ்நாடு குறித்து கேட்கப்படும் கேள்விகளில்  உரிய பதில் அளித்து தேர்வானால் மட்டுமே இனி அரசு வேலை கிடைக்கும் என்றும்  அமைச்சர் கூறினார். குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பில் தமிழ்மொழி பாடத்தில், 40% மதிப்பெண் பெற்றிருப்பது அவசியமாகிறது எனவும் தமிழ்நாட்டில், தமிழ் மக்களோடு பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் தேவை என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கடந்த ஆட்சியில் சில பணியிடங்களில் தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் அரசு பணியில் அமர்த்தப்பட்டதாகவும் கடந்த ஆட்சியில் நேரிட்ட தவறை சரிசெய்யவே, அரசு தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாக விளக்கமளித்தார்.

தமிழகத்தில் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி தாளை கட்டாயமாக்கி, தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணைக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், அரசாணை குறித்து நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது, முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, துறை ரீதியாகப் பல்வேறு நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நிதி நிலை அறிக்கை ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டபோது, மனித வள மேலாண்மை துறையின் மானிய கோரிக்கை நடைபெற்றபோது, போட்டி தேர்வில் தமிழ் மொழி தாள் கட்டாயமாக்கப்படும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு இணங்க தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், மாநில அரசின் எந்த தேர்வு எழுதினாலும், அடிப்படை தமிழ் தாள் கட்டாயம் எழுத வேண்டும். அதில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் கட்டாயம் வாங்க வேண்டும். அப்போது தான் அடுத்த சுற்றிற்கு தகுதி பெற முடியும். அரசு பள்ளியில் படித்து வர கூடிய மாணவர்கள் அதிகம் பயன்படுவார்கள்.இனி நடக்க கூடிய தேர்வுகளுக்கு இப்போதைய அரசாணை பொருந்தும். தமிழ் மொழி அறியாத பிற மாநில பணியாளர்கள் பலர் முறையாக பிரித்து பணியில் அமர்த்தப்படவில்லை. அதனை திருத்தும் வகையில்தான் இந்த அரசாணை அமைந்துள்ளது. கொரோனா காலத்தில் வெளி மாநில பணியாளர்கள் காரணமாக நிர்வாகத்தில் பல தவறுகளும் குளறுபடிகளும் ஏற்பட்டன. இதனை தடுக்கும் முயற்சியில் அரசுப் பணியாளர்களுக்குத் தமிழ்ப் புலமை இருப்பது அவசியம் என்று கூறினார்.

தமிழக அரசின் பணியில் 15 லட்சம் காலியிடங்கள் உள்ளன. இப்போதைக்கு 9 லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அரசு பணிகளில் சராசரியாக 35 சதவீதம் காலியிடங்கள் இருந்துள்ளது.அரசின் பணியிடங்களை நிரப்ப 70 முதல் 80 தேர்வுகள் நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.. தமிழகத்தின் கல்வி திட்டம் தான் நாட்டிலேயே சிறந்த கல்வி திட்டமாக திகழ்கிறது. கொரோனாவிற்கு முன்பு 90% மாணவர்கள் மேல்நிலை பள்ளி முடித்தார்கள். கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் படிப்பவருக்கு தமிழ் மொழி கட்டாயம் என்பதால் வாய்ப்பு அதிகரிக்கும். சமூக நீதி நிலைநாட்டப்படும். முனைவர் பட்டம் தகுதி அளவிற்கு தமிழ் தெரிய வேண்டும் என்று சொல்லவில்லை.. ஆனால், அடிப்படை தமிழ் அறிவுக்காக தான் இதனை முன்வைக்கிறோம் என்று விளக்கமளித்தார்.

போட்டி தேர்வுக்கெனத் தங்களை தயார்படுத்திக் கொண்டு இருக்கும் தமிழ் இளைஞர்களின் தாகம் புரிந்ததாலேயே தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அவர்களின் கவலைகளைப் போக்க இதுதான் தக்க சமயம் என்பதை தமிழக அரசும் உணர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.ஒருவேளை, ஆங்கில வழி படித்தவர்களுக்கு இது பிடிக்கவில்லை என்றால், அவர்கள் கோர்ட்டுக்கு போகட்டும் என்று கூறினார்.

click me!