செருப்பரசியலும் வெறுப்பரசியலும் இங்கு செய்தீங்க அரசியல் அனாதையாயிடுவீங்க.. பாஜகவை வச்சு செய்யும் முரசொலி.!

Published : Aug 16, 2022, 01:51 PM ISTUpdated : Aug 16, 2022, 01:57 PM IST
 செருப்பரசியலும் வெறுப்பரசியலும் இங்கு செய்தீங்க அரசியல் அனாதையாயிடுவீங்க.. பாஜகவை வச்சு செய்யும் முரசொலி.!

சுருக்கம்

வண்டியை ஓட்டுபவருக்கு ஒன்றும் புரியவில்லை; உடன் வந்தவர்களுக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை. வண்டியைவிட்டு இறங்கிய பெரியார், காலால் தடவியவாறு இருட்டில் எதையோ தேடினார். ஒரு செருப்பு கிடந்தது. அதை கையில் எடுத்த பெரியார், ‘அதுதானே பார்த்தேன்! ஏற்கனவே என் மேல ஒரு செருப்பு விழுந்தது. ஒரு செருப்பை வீசினவரால் இன்னொரு செருப்பை வெச்சுட்டு பிரயோஜனம் இல்லை. அதனால் அந்த இடத்துலதானே போட்டுட்டுப் போயிருக்கணும். 

தேசியக் கொடி ஏற்றிய காரில், - சுதந்திரத்தினத்துக்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் செருப்பு வீசுவதன் மூலமாக இவர்கள் நடத்த இருப்பது செருப்பரசியலும் வெறுப்பரசியலும் தான் என்பது அம்பலமாகிவிட்டது என முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கத்தில்;- கடலூர் மஞ்சக்குப்பத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு, திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை நோக்கி கைவண்டியில் பயணித்துக்கொண்டு இருந்தார் தந்தை பெரியார். நள்ளிரவு நேரம். பகலிலேயே அவர் மீது கல், சாணி விழும். அனைத்தையும் பார்த்தும் பயம் இல்லாமல்தான் பேசுவார். ராத்திரி நேரத்தில் பயணம் செய்யும்போது சும்மா இருப்பார்களா? திடீரென, கயிறுபோல ஏதோ ஒன்று அவர் மேல் விழுந்தது. அது... பச்சைப் பாம்பு. எடுத்துத் தூக்கிப் போட்டுவிட்டு, வண்டியை வேகமாகச் செலுத்தச் சொன்னார். கொஞ்சம் தூரம் போனதும், செருப்பு அவர் மீது வீசப்பட்டது.

கொஞ்ச தூரம் சென்றவர் வண்டியைத் திருப்பச் சொல்லி வந்த வழியே மீண்டும் போகச் சொன்னார். வண்டியை ஓட்டுபவருக்கு ஒன்றும் புரியவில்லை; உடன் வந்தவர்களுக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை. வண்டியைவிட்டு இறங்கிய பெரியார், காலால் தடவியவாறு இருட்டில் எதையோ தேடினார். ஒரு செருப்பு கிடந்தது. அதை கையில் எடுத்த பெரியார், ‘அதுதானே பார்த்தேன்! ஏற்கனவே என் மேல ஒரு செருப்பு விழுந்தது. ஒரு செருப்பை வீசினவரால் இன்னொரு செருப்பை வெச்சுட்டு பிரயோஜனம் இல்லை. அதனால் அந்த இடத்துலதானே போட்டுட்டுப் போயிருக்கணும். அதை எடுக்கத்தான் வந்தேன்’ எனச் சொன்னார்.

30 ஆண்டுகள் கழிந்தது. செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில் பெரியாருக்கு வெண்கல சிலை வைக்கப்பட்டது. திறந்து வைத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள். ‘செருப்பொன்று வீசினால் சிலையொன்று முளைக்கும்’ என கவிஞர் கருணானந்தம் எழுதினார். அப்படி சிலை வைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் ‘செருப்பு வீசியவர்கள்’ குணம் மாறவில்லை!

சேலத்தில் திராவிடர் கழக ஊர்வலம். அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வாங்கி பத்துப் பேர் கருப்புக் கொடி காட்டினார்கள். ஊர்வலத்தின் கூட்டத்தைப் பார்த்து அந்த பத்துப் பேருக்கு பொறுக்கவில்லை. ஒருவர் தூக்கி செருப்பு வீசி கலவரத்தை ஏற்படுத்தினார். அடுத்து நடந்த தேர்தலில் இதனையே ஒரு பிரச்சினையாக மாற்றப் பார்த்தார்கள். அந்த தேர்தலிலும் ( 1971) திராவிட முன்னேற்றக் கழகமே வென்றது.

கலவரங்களின் மூலமாக குழப்பங்களை ஏற்படுத்தி அதில் குளிர் காய்வதைத் தவிர வேறு எதுவும் மதவாத சக்திகளுக்கு - திராவிட இயக்க எதிரிகளுக்குத் தெரியாது. நிதிஅமைச்சர் மாண்புமிகு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன் மீது இன்றும் செருப்பு வீசுகிறார்கள் என்றால் அவர்கள் செருப்பைத் தாண்டி வளரவில்லை, வளரத் தயாராக இல்லை என்று தெரிகிறது.

‘’செருப்பு வீசுவது, சிலைகளைச் சேதப்படுத்துவது போன்ற அசிங்க அரசியல் தவிர வேறு எதுவும் பா.ஜ.க.வுக்குத் தெரியாது என்பது தெரிகிறது. பதற்றத்தை பற்ற வைத்து வன்முறைகள் மூலமாக கட்சியை வளர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தால் மக்கள் மன்றத்தில் அரசியல் அநாதைகள் ஆகிவிடுவார்கள் என எச்சரிக்கிறேன்.

ஊரெல்லாம் தேசியக் கொடி ஏற்ற வேண்டிய நேரத்தில் தேசியக் கொடி பறந்த காரில் செருப்பு வீசியதன் மூலமாக பா.ஜ.க.வின் கீழ்த்தர அரசியலை தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.” என்று கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் சொல்லி இருப்பது தான் பா.ஜ.க.வின் கடந்த கால - நிகழ்கால அரசியலின் குணாம்சம் ஆகும். இத்தகைய ‘கலாச்சாரத்தைத்’ தான் தங்களது கலாச்சாரமாக ஆக்க நினைக்கிறார்கள்.

பேட்டி எடுக்க வந்தவர்களைப் பார்த்து, ‘அறிவாலயத்தில் 200 ரூபாய் வாங்குகிறீர்களா?’ என்று கேட்கிறார் அக்கட்சியின் தலைவராக இருப்பவர். பட்டவர்த்தனமாக பட்டியலின மக்களை இழிவுபடுத்தி டுவிட்டர் பதிவுகளைப் போடுகிறார். இன்னமும் யூனிபார்ம் போட்ட போலீஸைப் போலவே நிருபர் கூட்டங்களை நடத்துகிறார். வாய்க்கு வந்ததை எல்லாம் வரலாறாகச் சொல்கிறார். பெரியாரை மதிக்கிறேன் என்று ஒரு பக்கமும் சிலையை உடைப்பேன் என்பவருக்கு மறுபக்க ஆதரவும் கொடுத்து வருகிறார். கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று தெரியாமல் எப்படியாவது வளர்த்துவிடத் துடிக்கிறார். ஆத்திரம் கண்ணை மறைப்பதால் அராஜக அரசியலுக்கு தூபம் போட்டு தன்னை நோக்கி கவனம் ஈர்ப்பதற்கு வன்முறைப்பாதையை ஊக்கப்படுத்துகிறார்.

‘’இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவர்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக் கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல் தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்” - என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

தேசத்துக்கும், - தேசபக்திக்கும், - விடுதலைப் போராட்டத்துக்கும், - தியாகத்துக்கும், இந்தக் கூட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது அவர்க்கும் தெரியும். ஆண்டுதோறும் ஏதாவது ஒரு பம்மாத்தை காண்பித்து தனது மீதான குற்றச்சாட்டுகளை திசை திருப்பிக் கொள்வது பா.ஜ.க.வுக்கு வாடிக்கை. தேசியக் கொடி ஏற்றிய காரில், - சுதந்திரத்தினத்துக்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் செருப்பு வீசுவதன் மூலமாக இவர்கள் நடத்த இருப்பது செருப்பரசியலும் வெறுப்பரசியலும் தான் என்பது அம்பலமாகிவிட்டது. அமைதிப்பூங்காவான தமிழகத்தில் அராஜகம் விதைக்க நினைப்பவர்கள் வீழ்வார்கள் என்பதே கடந்த கால வரலாறு என்று முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்வதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது..! எடப்பாடி பழனிசாமி சூளுரை
எந்த ஷா வந்தாலென்ன.? டெல்லி பாதுஷாவே வந்தாலும் கருப்பு சிகப்பு படை தக்க பாடம் புகட்டும்..! ஸ்டாலின் ஆவேசம்