
நிஜ வாழ்க்கையில் கமல்ஹாசன் முதலமைச்சராக முடியாது எனவும் படத்தில் வேண்டுமானால் அவர் முதல்வராகலாம் எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கமல்ஹாசன், அரசியலுக்குள் நுழைவது என்பது முள்கிரீடத்தை தலையில் சுமப்பது போன்றது எனவும், மக்களைப் பொருத்தவரையில், தங்களை யாரையும் கண்டுகொள்ளவில்லை என்றே நினைக்கின்றனரே தவிர இடதுசாரியா வலதுசாரியா அல்லது வேறு சிந்தனையுடையவர்களா என்றெல்லாம் மக்கள் பார்ப்பதில்லை எனவும் தெரிவித்தார்.
அரசியல் ஒரு புதைகுழி என்ற நிலையை மாற்றி அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும் என்பதே தற்போதைய தேவை எனவும், அரசியல்வாதி ஆவதற்கு முன் என்னை நான் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அதற்காக மக்களை நேரில் சென்று சந்திக்க உள்ளதாகவும், மக்களின் ஆதரவு இல்லாமல் எதையுமே செய்யமுடியாது எனவும் தெரிவித்தார்.
உடனே பெரிய மாற்றத்தை கொண்டுவருவேன் என்று கூற இயலாது எனவும் மக்களுக்கு உதவுவதற்காக எந்த அளவிற்கும் கீழே இறங்கிச் செல்ல தயாராக இருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, நிஜ வாழ்க்கையில் கமல்ஹாசன் முதலமைச்சராக முடியாது எனவும் படத்தில் வேண்டுமானால் அவர் முதல்வராகலாம் எனவும் தெரிவித்தார்.
குற்றங்களை மட்டும் காணும் கமல் முதல்வராக முடியாது எனவும் முதலில் மக்கள் பிரதிநிதியாக வந்து பிரச்னையை தீர்த்துவிட்டு பிறகு முதல்வராகலாம் எனவும் அவர் தெரிவித்தார்.