'நான் இன்று அமைச்சராக உயர்வதற்கு துர்கா ஸ்டாலின் அவர்கள் தான் காரணம்' என்று கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நாடு முழுவதும் உத்தமர் காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில், அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ம் தேதியான இன்று, கிராம சபைக் கூட்டங்களும் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துணையாரின் ஊரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன், “திருவெண்காடு ஊராட்சிக்கு தனி அதிகாரிகயை நியமித்தது ஆறுமாத காலத்துக்குள் ஊராட்சி தேவைகளை பட்டியலில் நிறைவேற்றிட தர நடவடிக்கை எடுக்கப்படும், இந்த கிராம சபை கூட்டம் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி, என் என்றால் கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் எனக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. பின்னர் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட தலைவர் வாய்ப்புகளை பெற்று தந்தார்.
அதற்கு முழு முதற்காரணம் இந்த மண்ணில் தமிழகத்திற்கே பெருமை சேர்க்க கூடிய துர்கா ஸ்டாலின்தான். நான் மீண்டும் ஆலங்குடியில் பேட்டியிடும் வாய்ப்பினை பெற்று தந்து, இந்த அரசியலில் இன்று அமைச்சராக உயர காரணமாக இருந்தவர் அவர் என்பதை நன்றியுடன் பதிவு செய்கிறேன்.
ஒரு வேளை இந்த வாய்ப்பை அவர் ஏற்படுத்த வில்லை எனில் அரசியலில் திசைமாறி போயிருப்பேன். நாங்கள் பெரிதும் மதிக்கின்ற அவர் பிறந்த மண்ணில், கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D