மணிகண்டனை தூக்கி எறிந்த எடப்பாடி பழனிச்சாமி... பதற்றத்தில் அரண்டு போய் கிடக்கும் அமைச்சர்கள்..!

By Asianet TamilFirst Published Aug 8, 2019, 7:16 AM IST
Highlights

மணிகண்டன் மீது பல புகார்கள் வந்த நிலையிலும் எடப்பாடி பழனிச்சாமி அமைதியாகவே இருந்தார். ஆனால், கேபிள் தலைவரை முதல்வர் நியமித்த பிறகு, அவருடை முடிவை விமர்சிக்கும் வகையில் பேசியது முதல்வருக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இவை எல்லாமே சேர்ந்துதான் மணிகண்டனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வைத்தது என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தமிழக அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டுள்ள நிலையில், புகாருக்கு ஆளாகியுள்ள அமைச்சர்கள் ஆடிப்போய் இருப்பதாகக் கூறப்படுகிறது. 
கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, இதுவரை எந்த அமைச்சரையும் நீக்கவோ சேர்க்கவோ இல்லை. இந்நிலையில் முதன் முறையாக தகவல் தொழிநுட்ப துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டனை அந்தப் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக அரசின் கேபிள் நிறுவன தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘கேபிள் தொழில் நடத்திவரும் ஒருவரே கேபிள் நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டது தவறு’ என்ற பொருளில் பேட்டியளித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
மணிகண்டன் நீக்கத்துக்கு இதுதான் முக்கிய காரணம் எனப் பேசப்பட்டுவருகிறது. ஆனால், வேறு சில காரணங்களும் இருப்பதாக அதிமுகவினர் கூறுகிறார்கள். “பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச லேப்டாப் கொள்முதல் செய்வது எல்லாம் இவருடைய துறையின் கீழ்தான் செயல்படுத்தப்படுகிறது. லேப்டாப் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைப்பதற்கு முன்பாகவே ராமநாதபுரத்தில் அமைச்சர் மணிகண்டன் அத்திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தப் பிரச்னையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பலிகடா ஆக்கப்பட்டார். முதல்வரை மீறி செயல்பட்டதை எடப்பாடி பழனிச்சாமி ரசிக்கவில்லை.
இதேபோல ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்று சென்டிமெண்டாக பாஜக நினைத்திருந்தது. ஆனால், தேர்தல் நேரத்தில் மணிகண்டன் செயல்பாடுகள் சரியில்லை என்று பாஜகவினர் அதிமுக தலைமைக்கும் தங்கள் கட்சியின் தலைமைக்கும் தெரியப்படுத்தி இருந்தார்கள். திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகர் கருணாஸும் மணிகண்டன் மீது தொடர்ந்து புகார் கூறிவந்தார். இதுபோல மணிகண்டன் மீது பல புகார்கள் வந்த நிலையிலும் எடப்பாடி பழனிச்சாமி அமைதியாகவே இருந்தார். ஆனால், கேபிள் தலைவரை முதல்வர் நியமித்த பிறகு, அவருடை முடிவை விமர்சிக்கும் வகையில் பேசியது முதல்வருக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இவை எல்லாமே சேர்ந்துதான் மணிகண்டனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வைத்தது”என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


யார் மீதும் எடப்பாடி பழனிச்சாமி கைவைக்க மாட்டார் என்று அமைச்சர்கள் எல்லோரும் நம்பிவந்த வேளையில், மணிகண்டனை அதிரடியாக நீக்கியுள்ளார் முதல்வர். மணிகண்டனைபோலவே மேலும் பல அமைச்சர்கள் மீது எடப்பாடியிடம் புகார்கள் சென்றுள்ளன. அப்படி புகாருக்கு ஆளான அமைச்சர்கள் தற்போது இந்த நடவடிக்கையால் ஆடிப்போய் உள்ளதாகவும் கூறப்படுகிறது. வேலூர் தேர்தல் முடிவையொட்டி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதையொட்டி அதிமுகவில் அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என்றும் அக்கட்சியில் கூறப்படுகிறது.

click me!