
ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏவும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான மணிகண்டன், சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர்.
அமைச்சர் மணிகண்டன் என்றாலே அடுக்கடுக்கான சர்ச்சைகள் நினைவுக்கு வரும் அளவுக்கு சர்ச்சைகளில் சிக்கியவர்.
அமைச்சர் மணிகண்டன் தலைமை தாங்க இருந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு கால தாமதமாக சென்றார். இதனால் மாணவர்கள் பல மணிநேரம் காத்திருந்தனர். அமைச்சரின் இந்த தாமதம் மக்கள் மத்தியில் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, நிகழ்ச்சி ஒன்றில், ஜெயலலிதா தெய்வமாக இருந்து நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என பேசினார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே அவர், தெய்வமாக இருந்து வழிநடத்துவதாக அமைச்சர் மணிகண்டன் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அண்மையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆரோக்கியமாக இருந்த மருத்துவமனை ஊழியரை பரிசோதிப்பதுபோல போட்டோவுக்கு போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார்.
தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர் மணிகண்டன்.
ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில், மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. மாணவர்கள் காலையிலிருந்து நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க, மிகத் தாமதமாகக் கலந்துகொண்ட அமைச்சர் மணிகண்டன், மிகக் கோபமாக மைக்கில் பேசினார். மாவட்ட நிர்வாகமே சரியில்லை, எந்த வேலையும் ஒழுங்காக நடக்கவில்லை. அங்கன்வாடிப் பணியாளர்கள் நேர்காணல் முடிந்து நீண்ட நாட்களாகியும் போஸ்டிங் போடவில்லை, ஊர்தி ஓட்டுநர் போஸ்டிங் போடவில்லை. இப்படிப் பணி நியமனங்களுக்கு உத்தரவு போடாமல் மாவட்ட அதிகாரிகள் இழுத்தடித்துவருகிறார்கள். இதையெல்லாம் கலெக்டர் கவனிக்கிறாரா என்று தெரியவில்லை என்று மாவட்ட ஆட்சியரைப் பார்த்து கடுமையாகப் பேசினார்.
அமைச்சரின் இந்த பேச்சு, மாவட்ட ஆட்சியர் உட்பட அங்கிருந்த அனைத்து அரசு அதிகாரிகளையும் கோபப்படவைத்தது.
அங்கன்வாடி, ஊர்தி ஓட்டுநர் உட்பட 3000 பணியிடங்களுக்கு அமைச்சர் தரப்பில் இரண்டு முதல் 4 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்போதுள்ள சூழலில், அமைச்சரின் சிபாரிசுக்கெல்லாம் வேலை போட்டுக்கொடுத்தால், அதிகாரிகள் பதில் சொல்லவேண்டிவரும். அதனால், சரியான நபரைத் தேர்வுசெய்ய காலதாமதமாகிறது. பணம் கொடுத்தவர்கள் அமைச்சர் தரப்பைக் கேட்பதால், பொதுமேடையில் அமைச்சர் தன் ஆதங்கத்தைக் காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி கைநீட்டி காசு வாங்கிவிட்டு அவர்களுக்கு வேலையும் வாங்கி தரமுடியாமல் காசையும் திருப்பித் தர மனமில்லாமல், அந்த கோபத்தை அதிகாரிகளிடம் காட்டியுள்ளார் அமைச்சர்.
இதவிடவா கொடுமைலாம் தமிழ்நாட்டுக்கு தேவை?