திமுக ஆட்சியில் அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை – அமைச்சர் விளக்கம்

By manimegalai aFirst Published Nov 21, 2021, 5:30 PM IST
Highlights

அதிமுக ஆட்சியில் இருந்ததைவிட தற்போது உள்ள திமுக ஆட்சியில் தான் அம்மா மருந்தகங்கள் கூடுதலாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், அம்மா மருந்தகங்கள் எதும் மூடப்படவில்லை எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் இருந்ததைவிட தற்போது உள்ள திமுக ஆட்சியில் தான் அம்மா மருந்தகங்கள் கூடுதலாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், அம்மா மருந்தகங்கள் எதும் மூடபப்டவில்லை எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா முதன்முதலாக தமிழக முழுவதும் அம்மா மருந்தகத்தை திறந்து வைத்தார். அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு அந்த வரிசையில் அம்மா மருந்தகமும் தொடங்கப்பட்டது. அவை தமிழக கூட்டுறவுத்துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்டு, நடந்தப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் தரமான மருந்துகளை பெற வேண்டும் எனும் நோக்கில்,அம்மா மருந்தகம் திட்டம் துவங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன்,  தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா மருந்தகங்களை மூடும் செயலில் ஈடுப்படுவதாக எதிர்கட்சி தலைவரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினார். அம்மா மருந்தகங்களால் தமிழ்நாட்டு மக்களின் மருத்துவ செலவு பெருமளவு குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்கள் அம்மா மருந்தகங்களில் செயல்பாடுகளை அறிந்து தங்கள் மாநிலங்களிலும் இதுபோன்ற மருந்தகங்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.இப்போது நிதிச்சுமையை காரணம் காட்டி அம்மா மருந்தகங்கள் மூட முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வருகின்றன. எனவே இந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். அதிமுக ஆட்சியில் இருந்ததை விடக் கடந்த 6 மாதங்களில் தான் அதிக அளவில் அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புள்ளிவிவரங்கள் இல்லாமலே அறிக்கை விடுவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையாகிவிட்டது என சாடியுள்ளார்.

திமுக ஆட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 41 லட்சம் பேர் வரை பயனடைந்துள்ளனர். நான் முன்னாள் முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் கொண்டுவந்த அம்மா மருந்தகங்கள் மூலம் எத்தனை பேர் பயனடைந்துள்ளார்கள் என்ற புள்ளிவிவரத்தை அளிக்க முடியுமா?” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

மேலும் இது குறித்து கூட்டுறவு சங்க பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில் , ''எதிர்க்கட்சித் தலைவரின் 20-11-2021 தேதியிட்ட அறிக்கையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் அம்மா மருந்தகங்களைத்  மூடி வருவதாக முற்றிலும் தவறான ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.

கூட்டுறவு சங்கங்களின் மூலம்  131 அம்மா மருந்தகங்கள், 174 கூட்டுறவு மருந்தகங்கள் என மொத்தம் 305 மருந்தகங்களை நடத்தி வருகிறது.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ஏற்கெனவே இயங்கி வந்த  எதுவும் மூடப்படவில்லை. மாறாக, அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுள்ளது. கடந்த ஆண்டு இயங்கிவந்த அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 126-லிருந்து 131 ஆக இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் மருந்தகங்கள் அனைத்தும் 20 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்து வருவதால், ஏழை எளிய மக்கள் பெருமளவில் பயன்பெற்று வருகின்றனர் என்பதனை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. அவ்வாறு உணர்ந்ததனாலேயே அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கையும் ஆண்டொன்றுக்கு 60 புதிய மருந்தகங்கள் என்கிற அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் 300 புதிய கூட்டுறவு மருந்தகங்களைப் புதிதாகத் தொடங்குவதற்கு கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக முதல்வரால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நடப்பு வருடத்தில், நிர்ணயிக்கப்பட்ட 60 என்கிற எண்ணிக்கையைவிடக் கூடுதலாக 75 மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

131  மூலம் நடப்பு ஆண்டில் 31.10.2021 வரை ரூ.44.88 கோடிக்கு வர்த்தகமாகியுள்ளது. அதேபோல 174 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ரூ.48.21 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஆக மொத்தம் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடத்தப்படும் 305 அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ரூ.93.09 கோடிக்கு இந்த ஆண்டில் 31.10.2021 வரை வர்த்தகமாகியுள்ளது.

மேலும், அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் மருந்து மாத்திரைகளை மையப்படுத்திக் கொள்முதல் செய்வதன் மூலம் மருந்து மாத்திரைகளின் விற்பனையை அதிகரிப்பதற்கும், அதன் மூலம் மேலும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் பலன் பெறுவதற்கும் கூட்டுறவுத்துறை ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’’. என தெரிவித்துள்ளார்.

 

click me!