கருப்பு பூஞ்சை நோயை விரட்ட களம் புகுந்த அரசு... முதல்வர் டெல்லி சென்று வந்ததும் நடக்க உள்ள தரமான சம்பவம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 15, 2021, 10:38 AM IST
கருப்பு பூஞ்சை நோயை விரட்ட களம் புகுந்த அரசு... முதல்வர் டெல்லி சென்று வந்ததும் நடக்க உள்ள தரமான சம்பவம்...!

சுருக்கம்

தமிழகத்தின் அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கான சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு, பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் நீடித்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் இரண்டாம் அலை கொரோனா பரவல் கொடூரமாக பரவி பாதிப்பையும், உயிரிழப்பையும் புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது. இது ஒருபுறம் என்றால் கொரோனா பாதித்தவர்களிடையே கண்டறியப்பட்ட கருப்பு பூஞ்சை நோய் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் இதுவரை 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 7 ஆயிரத்து 057 பேரும், குஜராத்தில் 5 ஆயிரத்து 418 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கூட கருப்பு பூஞ்சை நோயால் 1300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நோய்க்கு சிகிச்சை அளிக்க 60 ஆயிரம் மருந்து குப்பிகள் தேவைப்படுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: நேற்று வரை தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் ஆயிரத்து 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,  57 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை 3 மருந்துகளை ஐ.சி.எம்.ஆர். பரிந்துரைந்துள்ளது, அதனை தேவைக்கு ஏற்ப வழங்கி வருகிறோம். தொடக்க நிலையில் தொற்று உள்ள அனைவரும் பூரண நலமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கான சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு, பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அதுமட்டுமின்றி 13 மருந்துவ நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சை, தொற்றுக்கான காரணம், என்ன மாதிரியான மருந்துக்களை பரிந்துரைக்கலாம் என ஆய்வு நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று திரும்பியதும், மருத்துவ நிபுணர்களின் அறிக்கை அவரிடம் சமர்பிக்கப்படும். அதனை அடிப்படையாக கொண்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கான சிகிச்சை முறைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!