
சென்னை மாநகராட்சி பள்ளி சேர்க்கை படிவத்தில் தாழ்த்தப்பட்டவர், மலைஜாதியினர் என்று குறிப்பிட்டிருப்பதை திருத்தப்பட வேண்டும் என சமூக வலைதளத்தில் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை குறைந்து வருவதையொட்டி சென்னையில் உள்ள பள்ளிகளில் பதினோராம் வகுப்பு சேர்வதற்கான படிவத்தை விநியோகம் செய்யலாம் என அரசு அறிவித்தது. இதனையடுத்து சென்னையில் உள்ள 32 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளிலும் பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கான படிவத்தை நேற்று காலை முதல் மாநகராட்சி ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்தப் படிவத்தில் சாதி அடிப்படையான கேள்வியில் தாழ்த்தப்பட்டோர், மலை சாதியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என குறிப்பிட்டிருந்தது. ஒரு அரசு வெளியிடும் படிவத்தில் எவ்வாறு ஒரு சாதியை வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளது என்பதைக் குறித்து ட்விட்டரில் அதிக பேரால் பகிரப்பட்டது. இது அதிக அளவில் பகிரப்பட்டதன் எதிரோலியாக சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியது.
இந்தப் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் என பெயரை சென்னை மாநகராட்சி உடனடியாக மாற்ற வேண்டுமென பல்வேறு சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து சென்னை மாநகராட்சியில் இந்தப் படிவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.