இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சென்று சந்தித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என 3.06.2021 அன்று அறிவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கைகளுடன் கூடிய, சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 230 கோடி ரூபாய் செலவில் இப்பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை வரும் ஜூன் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பதற்காக தமிழகம் வருகை தர உள்ளார். கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லியில் குடியரசுத் தலைவர் சந்தித்து இதற்கான அழைப்பிதழை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று மாலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை தமிழக அரசு சார்பில் முறைப்படி வழங்கினார். இந்த சந்திப்பு புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க..IRCTC : இனி ஒருவருடைய ரயில் டிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.. முழு விபரம்