
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதியில் செயல்படுத்திய நலத்திட்டங்களுக்காகவே மக்கள், இரட்டை இலையை வெற்றி பெற வைப்பார்கள் என நினைத்தோம். ஆனால் வெற்றியை பணத்தால் கொள்ளையடித்துவிட்டார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சி என்பது சமூக நீதிக்கான ஆட்சி. கடும் நிதி நெருக்கடியை சந்துள்ள போதிலும், பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
கமல்ஹாசன் மாடியில் இருந்துகொண்டு ஏழை மக்களை பார்ப்பவர். எனவே அவர்களின் கஷ்டங்களை கமலால் என்றைக்குமே உணர முடியாது. நாங்கள் குடிசையில் இருந்து குடிசை மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டவர்கள். கமல் பொத்தாம் பொதுவாக பேசுகின்றவர். அதிமுகவை மட்டுமே குறிவைத்து உள்நோக்கத்துடன் விமர்சிப்பவர். அதனால் அவரது விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.
ஆர்.கே.நகர் தொகுதி ஜெயலலிதாவின் தொகுதி. கல்லூரிகள், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி ஆகிய திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தியிருக்கிறார். எனவே மக்கள் கண்டிப்பாக வாக்களிப்பார்கள் என நம்பினோம். ஆனால் அந்த வாக்குகளை கொள்ளையடித்துவிட்டார்கள். எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஜெயலலிதாவின் பெயரை சொல்லித்தான் வாக்கு சேகரிப்போமே தவிர பணத்தை நம்பி வாக்கு சேகரிக்கவில்லை. ஹவாலாகாரர்கள் தான் பணத்தை நம்பி தேர்தலை சந்திப்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.