
உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு அடிபணிந்து செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு பிரதானமாக முன்வைக்கப்படுகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஜெயலலிதா மிகக் கடுமையாக எதிர்த்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு சத்தமே இல்லாமல் நிறைவேற்றியது..
எடப்பாடி டீம் இப்படி இருக்க ஓ.பி.எஸ். அணியோ டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்தது. இதன்பின்னர் டூவிட்டரில் கருத்து தெரிவித்த பன்னீர்செல்வம், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று டுவிட்டினார். ஆனால் சிறிது நேரத்திலேயே அப்பதிவை நீக்கி விட்டு, வெறுமனே தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
தமிழக அரசு கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஜெயலலிதா அறிவித்த மக்கள் நலத்திட்டப் பணிகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்று குறிப்பிட்ட அவர், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், இதற்காக 175 கோடி ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.