ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், எம்.எல்.ஏ க்கள் யாரும், பன்னீர் அணிக்கு சென்று விடாத வகையில், சசிகலா தரப்பினரால் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது, கிலோ கணக்கில் தங்கமும், பணமும் வழங்கப்பட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், அவர்கள் அணி மாறாமல் இருப்பதற்காக, டெண்டர், பணி நியமனம், பணி மாறுதல் உள்ளிட்டவற்றில் கமிஷன் வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதை நம்பி, சசிகலா கை காட்டிய எடப்பாடி முதல்வர் ஆவதற்காக 122 எம்.எல்.ஏ க்களும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். தினகரன் சிறைக்கு செல்லும் வரை, கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அதற்கு பின்னர், டெண்டர், பணி நியமனம் உள்ளிட்டவற்றின் மூலம் கிடைக்கும் கமிஷனை, மாவட்ட செயலாளர்களுக்கு கூட கொடுக்காமல், அமைச்சர்களே எடுத்து கொள்வதாக புகார் எழுந்தது.
இதனால் பல மாவட்டங்களில், அமைச்சர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே மோதலும் வெடித்துள்ளது. எம்.எல்.ஏ க்களும் மோதல் போக்கை கடைபிடிக்க தொடங்கினர்.
இந்நிலையில், கூவத்தூரில் அளித்த வாக்குறுதியின்படி, தங்களுக்கு, எந்த வருவாயும் கிடைக்காததால், முன்னாள் அமைச்சர்கள், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன் ஆகியோர், தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ க்களுடன் தனித்தனியே ரகசிய ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்தனர்.
இதை அப்படியே விட்டால், நிலைமை கை மீறி போய்விடும் என்று உணர்ந்த, முதல்வர் எடப்பாடி, அவர்களை கோட்டைக்கு வரவழைத்து சமரசம் செய்ய முயற்சித்தார்.
அதன்படி, பழனியப்பன், வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, செய்யாறு மோகன், அரூர் முருகன், ஆம்பூர் பாலசுப்ரமணி ஆகியோர், நேற்று, முதல்வரை சந்தித்து பேசினார்.
அப்போது, தங்களுக்கு எதுவும் வழங்காமல், அமைச்சர்களே அனைத்தையும் வாரி சுருட்டிக் கொள்வதாக, சுமார் 45 நிமிடத்திற்கு மேல், முதல்வரிடம் புகார் பட்டியல் வாசித்துள்ளனர். அத்துடன் சிலர், தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்காதது குறித்தும் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
மேலும், கூவத்தூரில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும், நிறைவேற்றப்படாததால், அது குறித்து விவாதிக்க எம்.எல்.ஏ க்கள் கூட்டத்தை, உடனடியாக கூட்ட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, முதல்வருடன் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோரும் இருந்துள்ளனர். அப்போது, எம்.எல்.ஏ க்கள் அதிருப்தியை உடனுக்குடன் சரி செய்யா விட்டால், ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர்கள் முதல்வரிடம் கூறி உள்ளனர்.
எனவே, அமைச்சர்களுடன் பேசி, எம்.எல்.ஏ க்களின் பிரச்சினைக்கு, முதல்வர் விரைவில் தீர்வு காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.