
திமுக எம்.எல்.ஏக்களே ஸ்டாலினுக்கு ஆதரவாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது. பெரும்பான்மை இல்லை என விமர்சிக்கும் தினகரனுக்கு அவரது ஆதரவாளர்களே ஆதரவாக இல்லை.
முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். திமுக எம்.எல்.ஏக்கள் மத்தியில் அவருக்கே ஆதரவு கிடையாது. திமுக எம்.எல்.ஏக்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலின் தோற்றுப் போய்விடுவார். ஏனெனில் திமுக எம்.எல்.ஏக்கள் தேர்தலை எதிர்கொள்ள விரும்பவில்லை.
ஸ்டாலின் முதலில் தனது முதுகில் உள்ள அழுக்கை திரும்பிப் பார்க்க வேண்டும். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டியவர் எம்.ஜி.ஆர். ஆனால் எம்.ஜி.ஆரின் பெயரை அதிலிருந்து நீக்கியவர் கருணாநிதி. ஆனால் தற்போது சிவாஜி சிலையிலிருந்து பெயர் அகற்றப்பட்டது குறித்து ஸ்டாலின் விமர்சிப்பது எந்தவிதத்தில் நியாயம்?
இவ்வாறு ஸ்டாலினையும் தினகரனையும் விமர்சித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.