
இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது” சசிகலாவின் சகோதரர் திவாகரன் புதிய கட்சி தொடக்கம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கலாய்த்துள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசனின் 128வது பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, மாபா.பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பாராளுமன்ற தேர்தலில் 3வது அணி தொடங்குவது குறித்து தெலங்கானா முதல்வர் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். இதில் எங்களோட நிலைப்பாடு என்ன? என்பதை உடனடியாக சொல்ல முடியாது.
தேர்தல் அறிவித்த பிறகு தலைமை கழகம், கிளைக்கழகம், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர், எம்எல்ஏ, எம்பிக்கள், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களுடன் கலந்து இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும். யார் யாரோடு என்பது எல்லாம் கட்சிதான் முடிவு செய்யும். தனிப்பட்ட நபர் முடிவு செய்ய முடியாது என கூறினார்.
மேலும், சசிகலாவின் சகோதரர் திவாகரன் புதிய கட்சி தொடங்கியதற்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயகுமார், “இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது” என்பார்கள். அரிப்பு காரணமாக சொரிந்து கொண்டேதான் இருக்க வேண்டும். திவாகரனோ, தினகரனோ கட்சி ஆரம்பிக்கட்டும், எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். என்ன செய்தாலும் நிச்சயம் மக்களுக்கு ஒரு பலனும் ஏற்படப் போவது கிடையாது.
இதுவரை, தமிழகதில் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, அவர் வழியில் அதிமுக இவைதான் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். எம்ஜிஆர் தொடங்கிய இந்த கட்சியும், ஜெயலலிதா அமைத்து கொடுத்த இந்த ஆட்சியும் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவே எங்களுக்கு திருப்தி என இவ்வாறு அவர் கூறினார்.