
அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சில விமர்சகர்கள் தன்னை நோக்கி எய்து வந்த ‘ட்விட்டர் அரசியல்வாதி’ எனும் விமர்சன அம்புகளை, தொடர் கள நடவடிக்கைகள் மூலம் முறித்து உடைத்து குப்பையில் போட்டுள்ளார் கமல்ஹாசன்.
விதம் விதமான கான்செப்டுகளில், கருத்து செறிவான ஆலோசனை கூட்டங்களை நடத்தி புதுவகையான அரசியல் செய்து ஆரோக்கியமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். வெறும் பொதுக்கூட்டம், கொடியேற்றம், பிரியாணி வழங்கல்...என்கிற வழக்கமான பாலிடிக்ஸை பின்பற்றாமல் நெத்தியடியாக சில விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்! என்று பொதுவான அரசியல் பார்வையாளர்கள் அவர் மீது விமர்சனம் வைக்கிறார்கள்.
இந்நிலையில் லேட்டஸ்டாக கிராமப்புற வாக்காளர்களை கவர்ந்திழுக்கும் ப்ராஜெக்ட் ஒன்றை கையில் எடுத்திருக்கிறார் கமல்ஹாசன். இதற்காக தமிழகத்தின் சில மாவட்டங்களில் இருந்து விவசாயம் மற்றும் கிராம வளர்ச்சியில் ஆர்வமுடைய நபர்களை அழைத்து, மாதிரி கிராமசபை கூட்டம் நடத்தினார். இதற்காக அந்த மாவட்டங்களில் உள்ள ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் நிர்வாகிகளாக இருப்பவர்களுக்கு போன் போட்டு, கான்செப்டை கூறி, ஆர்வமுள்ள சிலரையும் அழைத்து வாருங்கள்! என்று கூறி வரவேற்றிருந்தனர்.
கமல்ஹாசனின் வழக்கமான ஸ்டைலில் மக்கள் நீதி மய்யம் எனும் போர்டுகள் பின்னணியாக அமைக்கப்பட்டு, ஜமக்காளம் விரிக்கப்பட்டு ‘மாதிரி கிராம சபை’ போல் உருவாக்கப்பட்டிருந்த அந்த கூட்டத்தில் , ‘நானும் கிராமத்தானே’ என்கிற டச்சிங் வார்த்தைகளுடன் பேச்சை துவக்கிய கமல், “இந்த தேசத்தின் உயிரோட்டமே கிராமங்கள்தான். கிராம சபைக்கான சட்டம் இயற்றப்பட்டு 25 வருஷங்கள் ஆகுது. ஆனால் இப்போது கிராமசபைகள் சரியா இயங்குறதில்லை. கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒரு கோடி ரூபாய் முதல் ஐந்து கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படுது. ஆனால் அது சரியா பயன்படுத்தப்பட்டு கிராம வளர்ச்சி ஏற்படுத்தப்படுதா? என்பது பெரிய கேள்வி. கிராம சபை கூட்டங்கள் முறையாக நடந்து, மக்கள் முன்னால் கணக்கு விவரங்கள் காட்டப்பட்டால்தான் ஊழல் குறையும். இதெல்லாம் நடப்பதற்கான சாத்தியங்களை நாம் முன்னெடுக்கணும்.” என்று கூறி அனுப்பியுள்ளார் தன் கட்சியினரை.
இந்த கூட்டம் மூலம் சில மாவட்டங்களை சேர்ந்த தன் கட்சியினரை கமல்ஹாசன் உசுப்பியிருக்கிறார் என்பதே உண்மை! அதாவது ’ஊழல் ஒழிப்பு’ என்பதை முன்னிறுத்தி அரசியல் செய்ய வந்திருக்கும் கமல், கிராமங்களின் நிர்வாகங்களில் நடக்கும் ஊழல்களை ஒழிப்பதில் முக்கியத்துவம் காட்ட துவங்கியிருக்கிறார்.
இவரதுவழிகாட்டுதல் மூலம் இவரது கட்சியினர் தங்கள் மாவட்டங்களை சேந்த கிராம நிர்வாகங்களை நோக்கி, வளர்ச்சி பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? இதில் எவ்வளவு செலவாகியுள்ளது? எவ்வளவு மீதி உள்ளது? நடைபெற்ற திட்டங்களின் நிதி மதிப்பு என்ன? என்றெல்லாம் கேள்விகளை கேட்டு நிற்பார்கள், கிராம நிர்வாகங்களின் மீது கடும் அதிருப்தியிலிருக்கும் மக்களின் வாக்கு வங்கிகளை தங்கள் பக்கம் திருப்ப முயல்வார்கள் என்று தெரிகிறது.
ஆக மொத்தத்தில் கிராமப்புற வாக்குகளை இழுக்கும் வகையில் களமிறங்கியிருக்கும் கமல்ஹாசனின் ‘ஆபரேஷன் வில்லேஜ்’ திட்டம் அரசியல் ரீதியில் அவருக்கு கைகொடுக்குமா? அல்லது கை நழுவி செல்லுமா? என்று கவனிப்போம்!