துரைக்கண்ணு மரணம்.. அவசரப்பட்ட எடப்பாடி.. அதிமுகவின் தேர்தல் வியூகத்தை மோப்பம் பிடித்த திமுக..!

By Selva KathirFirst Published Nov 10, 2020, 11:20 AM IST
Highlights

அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தை தொடர்ந்து அதிமுக தரப்பில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் அவர்களின் தேர்தல் வியூகத்தை திமுகவிற்கு படையல் போட்டு காட்டிவிட்டது.

அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தை தொடர்ந்து அதிமுக தரப்பில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் அவர்களின் தேர்தல் வியூகத்தை திமுகவிற்கு படையல் போட்டு காட்டிவிட்டது.

கடந்த வாரம் கும்பகோணம் பகுதியில் நான்கு முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நான்கு பேருமே அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு மிக மிக நெருக்கமானவர்கள். கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் பெரியவன் என்கிற முருகன், அமமுக பிரமுகர் சுரேஷ், பாமக பிரமுகர் பாலகுரு, முக்குலத்தோர் அமைப்பை சேர்ந்த வேதா உள்ளிட்ட நான்கு பேர் தான் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து பெரியவன் என்கிற முருகனின் சகோதரி மகன் சக்திவேலையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த ஐந்து பேரை கைது செய்ய கும்பகோணத்திற்கு சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டனர். கும்பகோணம் புறவழிச்சாலையில் போக்குவரத்தே முற்றிலும் தடை செய்யப்பட்டது. தஞ்சை எஸ்பியின் நேரடி மேற்பார்வையில் நான்கு பேரையும் ஒரே நேரத்தில் போலீசார் தூக்கினர். அவர்கள் கைது செய்யப்பட்டு சுமார் 4 மணி நேரம் வரை எங்கு வைக்கப்பட்டிருந்தனர் என்பது தற்போது வரை ரகசியமாகவே உள்ளது. அமைச்சர் துரைக்கண்ணு இருந்தவரை கும்பகோணம் பகுதியில் இவர்கள் வைப்பது தான் சட்டமாக இருந்தது.

காவல் நிலையங்கள் கடந்து நீதிமன்றங்கள் வரை இந்த நான்கு பேரும் கோலோச்சியிருந்தனர். ஆனால் அமைச்சர் மறைந்த சில நாட்களுக்குள் இவர்கள் அனைவரும் சிறைக்கு அனுப்பப்பட்டது துரைக்கண்ணு ஆதரவாளர்கள் மட்டும் அல்லாமல் தஞ்சை மாவட்ட அதிமுக நிர்வாகிகளையே கலகலக்க வைத்தது. இதன் பின்னணி குறித்து தஞ்சை மாவட்ட அதிமுகவில் பல்வேறு அம்சங்களை கூறுகின்றனர். அதில் மிக முக்கிய அம்சம் பணம் கொடுக்கல் வாங்கல் தான் என்கிறார்கள். அதாவது சாதாரண கொடுக்கல் வாங்கல் இல்லை நூற்றுக்கணக்கான கோடிகள் என்று பேச்சு அடிபடுகிறது.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாவட்ட வாரியாக தேர்தல் செலவுக்கு என்று ஒரு தொகை அனுப்பி வைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அந்த தொகை மாவட்டத்தின் தொகுதி எண்ணிக்கைக்கு ஏற்ப பல நூறு கோடிகள் என்று கூறுகிறார்கள்.உ தாரணமாக தஞ்சை மாவட்டத்திற்கு மட்டும் சுமார் 300 முதல் 500 கோடி ரூபாய் என்று பேச்சு அடிபடுகிறது. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் அந்த பணம் கொண்டு சென்று சேர்க்கப்பட்டதாகவும், அந்த பணத்திற்கு அந்தந்த நம்பிக்கைக்கு உரியவர்கள் தான் பொறுப்பு என்றும் சொல்கிறார்கள்.

அந்த வகையில் கோடிகளை பெற்ற அமைச்சர் துரைக்கண்ணு திடீரென சுய நினைவை இழந்த நிலையில் கொடுத்த பணம் எங்கு இருக்கிறதுஎன்கிற குழப்பம் அதிமுக மேலிடத்திற்கு வந்ததாக கூறுகிறார்கள். இதனை அடுத்து துரைக்கண்ணு குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் விசாரித்த போது அவர்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியவில்லை என்பதை மேலிடம் தெரிந்து கொண்டது. பிறகு உளவுத்துறை முடுக்கிவிடப்பட்ட நிலையில் தான் முருகன், வேதா, சுரேஷ், பாலகுரு ஆகிய நான்கு பேர் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். அமைச்சர் துரைக்கண்ணு மேலிடத்தில் இருந்து வந்த மொத்த பணத்தையும் இவர்கள் மூலமாகத்தான் மறைத்து வைத்ததை உளவுத்துறை மோப்பம் பிடித்தது. இதனை அடுத்தே நான்கு பேரையும் கைது செய்து பணத்தை மேலிடம் மீட்டதாக கூறுகிறார்கள்.

இந்த சம்பவம் நடந்து முடிந்த நிலையில் பெரிய அளவில் பேசு பொருள் ஆகாமல் ஆளும் தரப்பு பார்த்துக் கொண்டது. மு.க.ஸ்டாலினும் ஒரு அறிக்கையோடு இந்த விவகாரத்தை கை கழுவிவிட்டார். காரணம் இந்த ரெய்டு, கைது மூலமாக அதிமுகவின் தேர்தல் வியூகம் திமுகவிற்கு பட்டவர்த்தமான தெரிந்துவிட்டது. மாவட்டத்திற்கு 500 கோடி ரூபாய் வரை பட்ஜெட் போட்டு அதிமுக தேர்தலுக்கு தயாராவதால் தாங்களும் அந்த அளவிற்கு தயாராக வேண்டும் என்று தற்போது வியூகம் திமுக தரப்பில் வகுக்கப்படுகிறதாம்.

click me!