அமைச்சரே தேவையா இந்த அசிங்கம்..?? ஒருமையில் பேசிய கே.என் நேருவை டார் டாராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி.

By Ezhilarasan BabuFirst Published Nov 27, 2021, 3:13 PM IST
Highlights

அதற்கு முறையான பதில் அளிக்ககாமல் "சம்பந்தப்பட்டவர்களை விட்டு விட்டு என்னிடம் வந்து கேட்கிறீர்கள். மதுரையில் வெங்கடேசன் என்கின்ற ஒருவன் இருக்கின்றான் அவனிடம்  கேளுங்கள்" என்று ஒருமையில் பேசி பதிலளித்துள்ளார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை பொதுவெளியில் இதுபோல் பேசுவது பெரும் கண்டனத்துக்குரியது. 

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை ஒருமையில் பேசிய அமைச்சர் கே.என் நேருவுக்கு மதுரை மாவட்ட  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை பொதுவெளியில் இதுபோல ஒருமையில் பேசுவது கண்டனத்திற்குரியது என்றும் முதல்வர் ஸ்டாலின் உடனே  இதில் தலையிட வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இது அமைச்சர் கே. என் நேருவுக்கு நெருக்கடியாக மாறியுள்ளது. 

இரண்டு 5 ஆண்டுகளுகளை கழித்து மிகப்பெரிய பிரச்சார உத்தியை பயன்படுத்தி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது திமுக. ஸ்டாலின் முதல்வராக அரியணை ஏறியது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது, கொரோனாதொற்று காலத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆனால் கடந்த வாரம் பெய்த கனமழை அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு விவகாரத்தில் பெரிய அளவுக்கு திமுகவுக்கு மக்களின் ஆதரவு இல்லை என்ற நிலையே உள்ளது. 

அதேபோல ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்ற திமுக பல்வேறு வாக்குறுதிகளை அப்படியே கிடப்பில் போட்டுள்ளது. அதற்கு நிதி பற்றாக்குறை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், சில ஆளுங்கட்சியினரின் சில நடவடிக்கைகள் பலரையும் முகம் சுளிக்க வைப்பதாக இருந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடியிசம், அராஜகம், கட்டப்பஞ்சாயத்து தலைவிரித்தாடும். ஆட்சியாளர்கள் அதிகாரிகளை மதிக்க மாட்டார்கள், எதேச்சதிகாரமாக நடந்து கொள்வார்கள் என்பது போன்ற பல விமர்சனங்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் ஆட்சியாளர்கள்மீது இருந்து வருகிறது. 

இந்நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில்   நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கேன்.என் நேருவின் பேச்சு அமைந்துள்ளது.  இவர் தற்போது திமுகவின் முதன்மை செயலராக உள்ளார். கலைஞர் கருணாநிதி காலம்தொட்டு கட்சியில் மிகவும் செல்வாக்கு மிகுந்தவராகவும் இருந்து வருகிறார் நேரு  ஜவஹர்லால் நேரு மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக இவரது தந்தை இவருக்கு நேரு என பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. முழுக்க  முழுக்க விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். திருச்சி மாவட்டம் அரியநல்லூரில் மிளகாய் மண்டி, புள்ளம்பாடியில் பால் சொசைட்டி என ஆரம்ப காலத்தில் சொந்தத் தொழில் செய்து வந்தவர் இவர். எப்போது புல்லட்டில் வலம் வருபவர் என்பதால் புல்லட் நேரு என அழைக்கப்பட்டார். உள்ளூர் மக்கள் செல்வாக்கு அவருக்கு இருந்ததாலும் சிறுவயது முதலே கருணாநிதி மீது கொண்ட ஈர்ப்பால் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் அவர். 

1986 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுக சார்பில் புள்ளம்பாடி யூனியன் தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1989 முதல் 91 வரையிலான திமுக ஆட்சியில் மின்சாரத்துறை, பால்வளத்துறை, செய்தித்துறையில், தொழிலாளர் நலத்துறை என பல துறை அமைச்சராக பணியாற்றினார். பியூசி வரை படித்துள்ள நேரு சிறந்த பீல்ட் ஒர்க்கர் களப்பணியாளர் என கலைஞராலேயே பாராட்டு பெற்றவர் ஆவார். எப்போதும் யதார்த்தமாகவும், சகஜமாக வட்டார வழக்கில் பேசக்கூடியவர், நேரு 1966 திமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற போது கூட்டுறவு துறை அமைச்சராக இருந்தார், பின்னர் 2006 திமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார், தற்போது மீண்டும் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்து வருகிறார். எவரையும் மிக உரிமையாக பேசக்கூடியவர் ஆனால் சில நேரங்களில் அது சர்ச்சையாகவும் மாறிவிடுவது வழக்கம். இந்த வரிசையில் சமீபத்தில் அவர்  மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கையில் அவர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு தனது கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனை, இந்த கேள்வியை சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்கள்.. வெங்கடேசன்னு ஒரு ஆள் இருக்கான் அந்த ஆள் கிட்ட கேளு என கூறுகிறார்.

தற்போது  இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, இதை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர், இந்த வீடியோவை பகிருந்துள்ள ஒரு நபர், திமுக அமைச்சர் மிகவும் நாகரீகமாக பேசுகிறார்... கோபாலபுரம் வளர்ப்பு அப்படித்தான் இருக்கும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான வெங்கடேசனையே ஒரு ஆளு இருக்கான்னு அந்த ஆளு கிட்ட கேளு என அமைச்சர் கே.என் நேரு பேசுகிறார் என்றால், அவருடன் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்தவர்கள் நிலவை பாவம் என பதிவிட்டுள்ளார். பலரும் இதேபோன்ற விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அதில் ஒருவர், இப்படி அவமானப்படுத்தினாலும் கூட கம்யூனிஸ்டு தோழர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.

 சு வெங்கடேசன் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும், சிறந்த தமிழ் புதின எழுத்தாளராகவும் இருந்து வருகிறார். இவர் எழுதிய காவல் கோட்டம் என்ற நூலுக்கு 2011 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.  சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும், அவையின் பல்வேறு கேள்விகளை முன்வைத்து அதற்கு தீர்வு காண்பவராகவும், அதேபோல் தமிழகம் சார்ந்த உரிமைகள் தொடர்பாக அடிக்கடி மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு கடிதம் எழுதி அதற்கு தீர்வு காணும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துவருகிறார் சு வெங்கடேசன். இப்படிப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை அமைச்சர் கே.என் நேரு அவன் இவன் என்று ஒருமையில் பேசியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது இந்நிலையில அமைச்சர் கே.என் நேருவின் பேச்சை மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- 

மதுரையில் கடந்த புதனன்று  தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு மதுரை விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை  மற்றும் விமான நிலைய விரிவாக்க கட்டுமான பணிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முறையான பதில் அளிக்ககாமல் "சம்பந்தப்பட்டவர்களை விட்டு விட்டு என்னிடம் வந்து கேட்கிறீர்கள். மதுரையில் வெங்கடேசன் என்கின்ற ஒருவன் இருக்கின்றான் அவனிடம்  கேளுங்கள்" என்று ஒருமையில் பேசி பதிலளித்துள்ளார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள்  பிரதிநிதியை பொதுவெளியில் இதுபோல் பேசுவது பெரும் கண்டனத்துக்குரியது. எனவே தமிழக முதல்வர் இதன் மீது தலையிட வேண்டும். மேலும் இப்பேச்சு கண்டனத்துக்கூரியது. என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்ட செயலாளர் கே. ராஜேந்திரன் அறிக்கை  ஆகியோர் வெளியிட்டுள்ளார்கள். 
 

click me!