சகோதரரை எம்.பி.யாக பார்க்க ஆசைப்படும் அமைச்சர்... முயற்சி திருவினையாகுமா?

Published : Jan 21, 2019, 09:45 AM ISTUpdated : Jan 21, 2019, 10:25 AM IST
சகோதரரை எம்.பி.யாக பார்க்க ஆசைப்படும் அமைச்சர்... முயற்சி திருவினையாகுமா?

சுருக்கம்

ஜூலை மாதத்தில் மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் தனது சகோதரருக்கு ஓரிடத்தை உறுதி செய்ய கட்சி மேலிடத்தை நெருக்கிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது சகோதரரை நாடாளுமன்ற உறுப்பினராக்கும் முயற்சியில் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தீவிரம் காட்டிவருவதாக தகவல்கள் கூறுகின்றன.

 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவந்துவிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டி வருகின்றன. அதிமுக கூட்டணி குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ முடிவும் வெளியிடப்படவில்லை. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் திரைமறைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக பாமக இணைந்து போட்டியிடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இதற்கிடையே சட்ட அமைச்சரும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகம் தனது சகோதரர் ராதாகிருஷ்ணனுக்கு ஆரணி தொகுதியைக் கேட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஆரணி தொகுதியில் தனது சகோதரரின் வெற்றிக்கு உதவுமாறு தற்போதைய சிட்டிங் எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் ஏற்கனவே சி.வி.சண்முகம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாயின. ஆனால், ஏழுமலையும் ஆரணி தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதால், அந்த முயற்சியில் முட்டுக்கட்டை விழுந்தது.

இதற்கிடையே அதிமுக கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிடும் என்று உறுதியாகக் கூறப்படுகிறது. அப்படி பாமக இணைந்தால், ஆரணி தொகுதியை பாமக கேட்டு வாங்கிவிடும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி போட்டியிட்டார்.

இந்த முறை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி போட்டியிடக்கூடும் என்று பாமகவினர் மத்தியில் பேச்சு உலா வருகிறது. ஆரணி தொகுதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், தனது சகோதரரை மாநிலங்களவை உறுப்பினராக்கவும் காய்  நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. ஜூலை மாதத்தில் மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் தனது சகோதரருக்கு ஓரிடத்தை உறுதி செய்ய கட்சி மேலிடத்தை நெருக்கிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!