படிக்கும் இடத்தில் பாலியல் தொல்லையா? 14417க்கு எப்போனாலும் கால் பண்ணுங்க!!

By Narendran SFirst Published Nov 14, 2021, 3:05 PM IST
Highlights

14417 என்ற எண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு மாணவ மாணவிகள் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த மாணவிக்கு அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததுள்ளார். இதுக்குறித்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் மாணவி புகார் கொடுத்து அவர் எந்த வித நவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆசிரியர் மிதுன் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இதை அடுத்து மிதுனையும் பள்ளி முதல்வரையும் கைது செய்யக்கோரி சக மாணவிகள், அவர்களது பெற்றோர், இறந்த மாணவியின் பெற்றோர், உறவினர், சமூக ஆர்வலர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து  ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டதோடு அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல் பாலியல் குற்றத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டம் பாயந்ததை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோரை இன்று அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி ஆசிரியர், மற்றும் பள்ளியின் முதல்வர் இருவரையும் கைது செய்துவிட்டதாகவும், அவர்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் மேலும் இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதோடு தனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலியை தருவதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவி எண்ணை அறிவித்தார். 14417 என்ற எண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று கூறிய அவர், போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாணவ, மாணவிகள் அச்சப்படாமல் புகார் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். எந்த பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக அதில் தொடர்பு கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்தார்.

இதனிடையே பள்ளி மாணவ மாணவிகளுக்கு எதிரான பாலியன் வன்முறைகள் பெருகி வருகின்றன. அதில் பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்களே மாணவ மாணவிகளை பாலியல் வன்முறை செய்வது தொடர்ந்து வருகிறது. கோவையில் நடந்தது போல இன்னும் தமிழகம் முழுவது பல பள்ளிகளில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மாணவ மாணவிகள் அச்சப்பட்டு அத்தகைய பாலியல் வன்முறைகளை வெளியில் கூறாமல் தங்களுக்குள் வைத்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் சிலர் மனமுடைந்து தற்கொலையும் செய்து கொள்கின்றனர். ஆகவே ஆசிரியர்களால் பாலியல் தொல்லை ஏற்பட்டல் தற்கொலை எண்ணங்களை அகற்றிவிட்டு அச்சமின்றி  14417 என்ற எண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள். மேலும் உங்களுக்கு தெரிந்தவர் யாரேனும் இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கி இருந்தால் அதனை பெற்றோரிடமோ அல்லது 14417 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ தெரியப்படுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ மாணவியரும் அதிலிருந்து மீட்கப்படுவர்.

click me!