
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே அரசின் அதிரடி செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் பெருகி வருகிறது. முதல்வர் வழியில் அனைத்துறை அமைச்சர்களும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவது, அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி பணிக்கு நேரத்துக்கு வராத அதிகாரிகளை கண்டிப்பது, கொரோனா பெருந்தோற்று குறித்து மருத்துவமனைகளை ஆய்வு செய்வது என தீயாய் சுழன்று வருகின்றனர்.
குறிப்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே ஆவின் பாலகங்களில் அதிரடி ஆய்வு நடத்தி வருகிறார். ஊரடங்கு காலத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் வந்துவிடக்கூடாது என்பதில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பாலை அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பால் முகவர்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சொன்னதோடு மட்டுமல்லாது அப்படி விலை அதிகமாக பால் விற்பனை செய்த சில்லறை விற்பனை கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ள போதும், தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஜூன் 21ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள காலத்தில் பால் விநியோகம் குறித்து அமைச்சர் நாசர் இன்று ஈரோட்டில் உள்ள ஆவின் பாலகங்களில் அதிகாலை 5 மணி முதலே ஆய்வு நடத்தினார். ஆய்வு நடத்துவதோடு மட்டும் இல்லாமல், ஆவின் பாலகத்தில் வேற பொருட்களை விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.