
செய்திக்குள் செல்லும் முன்பாக, அந்த அறிவிப்பு குறித்து குவிய துவங்கியுள்ள விமர்சனங்களில் ஒன்றை பார்த்துவிடுவோம்...
“தன் உத்தரவுகளை தட்டாமல், தவறாமல் கேட்டு விசுவாசமாய் செயல்படும் தமிழக அரசின் ‘நாணய நடத்தையை’ பாராட்டி, அதற்கு கைமாறாக ‘நாணயம்’ வெளியிட முடிவு செய்துள்ளதோ மத்திய அரசு?”
_ என்பதுதான் அது.
சரி இனி விஷயத்துக்குள் நுழைவோம். தமிழ்நாடெங்கும் தடபுடலாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது தமிழக அரசு. தமிழக அரசு இயங்குகிறது என்பதை சுரீர் என சுட்டிக் காட்டும் ஒரே ஆதாரம் இந்த நிகழ்ச்சிதான். வாரத்துக்கு 2 அல்லது 3 மாவட்டங்களில் கூட இந்த நிகழ்ச்சியை நடத்தி தங்கள் சுறுசுறுப்பை காட்டிக் கொண்டிருக்கின்றனர் முதல்வர், துணை முதல்வர் இருவரும்.
இந்த நிலையில், பழனிசாமி மற்றும் பன்னீர் இருவரும் வேறு வேறு அணிகளாக இருந்தபோதே டெல்லி சென்று பிரதமரிடம் ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம். இதையொட்டி அவரது உருவம் பொறித்த நாணயங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்.” என்கிற கோரிக்கையை வைத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை இப்போது நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு. எம்.ஜி.ஆர். உருவம் பொறித்தௌ நூறு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2011ஆம் ஆண்டு இந்திய நாணயச்சட்டத்தின் பிரிவின் கீழ் இதற்கான உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தில் 50% வெள்ளி, 40% தாமிரம், நிக்கல் 5%, துத்தநாகம் 5% கலந்திருக்குமாம். வட்ட வடிவில் இருக்கும் இந்த நாணயத்தை சுற்றி 200 கோடுகள் வரிவரியாக இருக்குமாம். ஐந்து ரூபாய் நாணயத்தில் 75% தாமிரம், 20% துத்தநாகம், 5% நிக்கல் கலந்து இருக்குமாம். இதில் வரி வரியாக 100 கோடுகள் இருக்குமாம்.
உடனடியாக இந்த நாணய தயாரிப்பு உத்தரவு அமலுக்கு வருகிறதாம். நாணய தயாரிப்பு முடிவடைந்ததும் மத்திய அரசு ஒரு விழாவை நடத்தி இதை வெளியிடும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மெய் சிலிர்த்துப் போயுள்ளனராம் எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸும்.! உட்கட்சி களேபரங்களால் கலகலத்துக் கிடந்த அ.தி.மு.க.வில் இந்த சில்லரை செய்தி கலகலப்பை உண்டாக்கியிருக்கிறது என்பது உண்மை. இனி ஆட்சிக்கு யார், கட்சிக்கு யார் என்பதை இந்த புது நாணயங்களை வைத்து டாஸ் போட்டுக்கலாம். டாஸின் முடிவு எம்.ஜி.ஆரே சொன்ன முடிவாக அல்லவா இருக்கும்.
இப்போது இந்த செய்தியின் துவக்கத்தில் உள்ள, ஒரு குறும்புக்கார விமர்சகரால் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த விமர்சனத்தை மறுபடியும் ஒரு முறை வாசியுங்கள்.