
ஆர்கே நகர் தொகுதியில் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், அனைத்து கட்சியினரும் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும், வாக்கு சேகரிப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதிமுகவில் மூன்று அணிகளாக பிரிந்து, தேர்தலை சந்திக்கின்றனர். இதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனித்து போட்டியிடுகிறார். ஓ.பி.எஸ். அணியில் மதுசூதனன் போட்டியிடுவதாக கூறப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.
இதேபோல் சசிகலா அணியில் டி.டி.வி.தினகரன் அல்லது முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், அதிமுக ஆட்சி மன்ற கூட்டத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றி, உறுதி செய்யப்படும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, சசிகலா அணி சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உறவினர் சுதா விஜயன் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் அவர், பேசியுள்ளார்.
இதைதொடர்ந்து அதிமுக ஆட்சி மன்ற கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இதில், சுதா விஜயன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும், இந்த கூட்டம் முடிந்த பின்னர், வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் எனவும் தெரிகிறது.
2016 சட்டமன்ற தேர்தலில், ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட சுதா விஜயன் விருப்பம் தெரிவித்தார். எம்.ஏ., எம்.எட்., பட்டம் பெற்றுள்ள சுதா, அதிமுகவில், கடந்த 1990ம் ஆண்டு முதல் முதல் உறுப்பினராக உள்ளார்.
சசிகலா அணியில் இருந்து ஓ.பி.எஸ். விலகியபோது, அதிமுகவில் விரிசல் ஏற்படக் கூடாது என சுதா விஜயன், பத்திரிகையாளர்களை சந்தித்து கூறினார். எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கம், யாராலும் அழிய கூடாது எனவும் அவர் கேட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.