மாற்று கட்சியினருக்கு பதவி! எம்.ஜி.ஆர் வழியில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

By vinoth kumarFirst Published Oct 25, 2018, 9:35 AM IST
Highlights

மாற்று கட்சியில் இருந்து மக்கள் மன்றத்திற்கு வருபவர்களுக்கு முக்கிய பதவிகளை கொடுக்கலாம் என்கிற முடிவுக்கு ரஜினி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மாற்று கட்சியில் இருந்து மக்கள் மன்றத்திற்கு வருபவர்களுக்கு முக்கிய பதவிகளை கொடுக்கலாம் என்கிற முடிவுக்கு ரஜினி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தி.மு.கவில் இருந்து வெளியேறிய போது எம்.ஜி.ஆர்க்கு பக்கபலமாக இருந்தவர்கள் அவரது ரசிகர்கள் தான். அ.தி.மு.க என்கிற கட்சியை உருவாக்கிய போதும் ரசிகர் மன்றத்தினருக்கு தான் எம்.ஜி.ஆர் பதவிகளை வாரிக் கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு தி.மு.கவில் இருந்து வந்தவர்கள், காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும் எம்.ஜி.ஆர் முக்கிய பதவிகளை கொடுத்தார். 

ஏன் தி.மு.கவில் கலைஞருக்கு மிகவும் நெருக்கமாக இருந்து அ.தி.மு.கவிற்கு வந்தவர்களுக்கும் கூட எம்.ஜி.ஆர் முக்கிய பதவிகளை கொடுத்தார். அமைச்சர்களாக கூட ஆக்கினார். இதற்கு காரணம் ரசிகர் மன்றம் என்பதோடு அரசியல் நின்றுவிடுவதில்லை என்பதை எம்.ஜி.ஆர் உணர்ந்திருந்தார். அதனால் தான் அவர் அரசியலில் சாதனை நிகழ்த்தினார். இதே பாணியைத்தான் ரஜினியும் தற்போது மாற்று கட்சியினருக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு மக்கள் மன்றத்தில் நிர்வாக பதவிகள் வழங்கிய போது தான் பிரச்சனை ஏற்பட்டது. 

ராமநாதபுரம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் மாற்று கட்சியினருக்கு பதவி வழங்கியதற்கு எதிராக போராட்டம் நடத்திய ரசிகர்களை மன்றத்தில் இருந்தே ரஜினி நீக்கினார். அத்தோடு மட்டும் அல்லாமல் வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் சாதிக்க முடியும் என்று கூறுவது பைத்தியக்காரத்தனம் என்றும் ரஜினி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். 

இந்த அறிக்கை வெளியிட்டதன் நோக்கமே ரசிகர் மன்றம் மட்டுமே கட்சி அல்ல, கட்சி என்று ஆரம்பித்தால் வேறு சிலருக்கும் பதவிகள் வழங்கப்படும் என்பதை மறைமுகமாக ரஜினி தனது ரசிகர்களுக்கு கூறுவதற்கு தான் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். ஏற்கனவே ஏ.சி.சண்முகம், தமிழருவி மணியன் உள்ளிட்டோர் ரஜினியுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர்.

இவர்கள் இருவருக்கு மட்டும் அல்லாமல் மாவட்ட வாரியாக வேறு கட்சியில் இருந்து வருபவர்களுக்கும் உரிய மரியாதை மற்றும் பொறுப்புகளை வழங்க ரஜினியே நேரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தேர்தல் அரசியலில் அனுபவம் மிக்கவர்களை தேடிப்பிடிக்கும் வேலையில் மாவட்ட நிர்வாகிகள் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

click me!