இன்னும் சற்று நேரத்தில் நிரம்புகிறது மேட்டூர் அணை… 16 கண் பாலத்தில் 30000 கனஅடி உபரிநீர் திறப்பு !!

First Published Jul 22, 2018, 9:54 PM IST
Highlights
Mettur dam ready to fill 120 feet and water release through 16 eye bridge 8000 cft


கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் இன்னும் சற்று நேரத்தில் மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளவான 120 அடியை எட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. தற்போது  அணையின் நீர்மட்டம் 119 அடியைத் தாண்டியுள்ளது. அதே நேரத்தில் 16 கண் பாலத்தில் இருந்து 8000 கனஅடி  உபரி நீர்  வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் 2 அணைகளில் இருந்தும் கடந்த வாரம் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இந்தநிலையில், மாலை 5 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக இருந்தது. 

நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை 14வது நாளாக நீடிக்கிறது. கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை அளந்து கண்காணித்து வருகின்றனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த 17-ந் தேதி இரவு 9 மணிக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து கடந்த 19 ந் தேதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர்  திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 109 அடியாக இருந்தது. 

அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட பல மடங்கு அதிகரித்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி 117  அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், பகல் 12 மணியளவில் 118  அடியாக உயர்ந்தது.  நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தற்போது 119 அடியை நெருக்கியுள்ளது. இதையடுத்து இன்னும் சிறிது நேரத்தில் அணை மதன் முழுக் கொள்ளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அணையின் 16 கண் மதகு பாலத்தில் இருந்து விநாடிக்கு 8,000 கனஅடி நீர் சற்றுமுன் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும் 16 கண் பாலம் பகுதியையொட்டி  அமைந்துள்ள தங்கமாபுரி பட்டினம் மற்றும் காவிரி கரையையட்டிய கோல்நாயக்கன்பட்டி உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் வருவாய்த்துறை மூலம் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இரவு 8 மணி முதல் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறக்கும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

எனவே பொதுமக்கள் காவிரி ஆற்றங்கரை மற்றும் கால்வாய் கரை பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும், நீச்சல் அடிப்பதையோ, செல்பி எடுப்பதையோ, காவிரி ஆற்றின் கரையில் நின்று தண்ணீர் வரத்தை வேடிக்கை பார்ப்பதையோ தவிர்க்க வேண்டும் என்றும்  மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

click me!