4 ஆண்டுகளுக்குப் பின் 100 அடியைத் தாண்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்… ஒகேனக்கலில் பாறைகளை மூழ்கடித்து பொங்கிப் பாயும் காவிரித்தாய் !!

First Published Jul 18, 2018, 6:23 AM IST
Highlights
Mettur dam level increased 102 feet


கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 ஆண்டுகளுக்குப் பின் 102 அடியை எட்டியுள்ளது. இந்த ஆண்டு மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளவை எட்டும் என விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 642 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஐந்தருவிகள் மற்றும் பிரதான மெயின் அருவி, பெரிய பாணி உள்ளிட்ட பகுதிகளில் பாறைகளை மூழ்கடித்தப்படி தண்ணீர் ஆர்ப் பரித்து கொட்டியதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 7 ஆயிரத்து 64 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒரு லட்சம் கனஅடிக்கும் அதிகமாக நீர்வரத்து இருந்ததால் நேற்று  இரவு 8 மணியளவில் அணையின்  நீர்மட்டம் 100 அடியை எட்டியது. நள்ளிரவில் 102 அடியாக உயர்ந்தது. அணை வரலாற்றில் 100 அடியை எட்டுவது இது  64-வது முறையாகும்.

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி அணை யின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. அதன்பின்னர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து விடுகிறார். அணையின் நீர்மட்டம்  தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருவதையொட்டி மேட்டூர் அணையை கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனைக் காண  ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். 

click me!