மத்திய அரசுக்கு எதிராக களமிறங்கும் தமிழக கட்சிகள்… மேகதாது பிரச்சனையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற நாளை கூடுகிறது சட்டப் பேரவை !!

By Selvanayagam PFirst Published Dec 5, 2018, 6:45 AM IST
Highlights

மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதித்து தனி தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது. இதற்கான  அறிவிப்பை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் மேகதாதுவில்  காவிரி அணையின்  குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த அணை கட்டும் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதி தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையடுத்து மேகதாவில்  புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்துவருவது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் ப.தனபாலை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கான அனுமதி வேண்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு சபாநாயகர் ப.தனபால் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அதை ஏற்றுக்கொண்டு தமிழக சட்ட சபையில் சிறப்பு கூட்டத்தை நடத்துவதற்கான தேதி மற்றும் நேரத்தை குறித்து அறிவிப்பு ஆணை ஒன்றை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு வெளியிட்டார்.

சட்டசபையில் 6-ந் தேதி  அதாவது நாளை  மாலை 4 மணிக்கு அவை கூட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவோடு இரவாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இது குறித்து மின் அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. நாளை மாலை 4 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியதும், முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானம் ஒன்றை கொண்டுவர இருக்கிறார்.

அந்த தீர்மானத்தின் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சி தலைவர்கள் பேச இருக் கிறார்கள். காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளை தொடர்ந்து தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் பேச இருக்கிறார். இறுதியாக பொதுப்பணித் துறையை வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி பேச இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தி அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த தனித் தீர்மான நகல்கள் மத்திய அரசுக்கும், கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

click me!