மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்... மருத்துவத் துறையில் மாஸ் காட்டும் மா.சு..!

By Asianet TamilFirst Published Jul 25, 2021, 9:01 PM IST
Highlights

மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் இத்திட்டம் உலகத்துக்கே ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 

சென்னையில் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முகக்கவசம் அணிவது ஒன்றுதான் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான ஒரே தீர்வு. கடந்த ஆட்சியில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்க வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், முகக்கவசங்கள் தேவையில்லை என்று மறுத்துவிட்டார்கள். பிறகு வருவாய்த் துறை மூலம் முகக்கவசங்கள் வழங்கினார்கள். ஆனால், அவற்றால் எந்த உபயோகமும் இல்லை என்பது பிறகு கண்டறியப்பட்டது. அது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.


தனியார் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி பங்களிப்பானது ரூ.5 கோடி அளவில் சேர்ந்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக தனியார் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை  முதல்வர் ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் தனியார் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி பங்களிப்போடு தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு தனியார் மருத்துவமனை சார்பில் எந்தத் தனியார் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் எவ்வளவு தடுப்பூசிகள் செலுத்தப்படவிருக்கின்றன என்ற விவரம் அப்பகுதி பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தப்படும்.
பல்வேறு மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் சார்பிலும் இந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு ரூ.780க்கு செலுத்தப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், தனியார் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி மூலம் அப்பகுதி தனியார் மருத்துவமனைகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத தடுப்பூசி தொகுப்பினைப் பயன்படுத்த உள்ளனர்.


கோவையில் நடைபெற்ற இதுதொடர்பான கூட்டத்தில் கோயம்முத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற 4 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி பங்களிப்பு குறித்தக் கூட்டத்தில் 117 மருத்துவமனை நிர்வாகங்கள் பங்கேற்றன. அதன்பிறகு சென்னையில் நடைபெற்ற தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற கூட்டங்களில் 137 பிரதிநிதிகள் பங்கேற்றனர். பெரிய அளவிலான மருத்துவமனை நிர்வாகங்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.
மக்களைத் தேடி மருத்துவம் என்கிற இத்திட்டம், உலகத்துக்கே ஒரு முன்னுதாரணமாக இருக்கும். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் எத்தனை நோய்கள் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து, அந்நோய் உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்ப்பது, இலவசமாக மருந்துகளை அளிப்பது இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். அதற்காக நானும், துறை செயலாளர், துறை அலுவலர்கள் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்குச் சென்று திட்டம் தொடங்கப்படும்.” என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 

click me!