பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவைத் தொடர்ந்து அதிரடி... கிறிஸ்துவ இயக்க நிர்வாகியை அலேக்காக தூக்கிய போலீஸ்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 25, 2021, 8:03 PM IST
Highlights

இந்த வழக்கில் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபனை போலீசார் தேடி வந்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா;- தமிழகத்தில் திமுக வெற்றிபெற்றது சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரான சேகர் பாபு, தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் குறித்துப் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தின.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகளை வாங்கி வெற்றிபெற்று விட்டு எம்.எல்.ஏ-க்கள் இந்து கோயில்கள்தோறும் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனப் பேசியதுடன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ஓட்டுக்கு இரண்டாயிரம் வீதம் கொடுத்து கிறிஸ்தவ நாடார் ஓட்டை வாங்கி வெற்றிபெற்றதாகவும் பேசியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் குறித்தும் சர்ச்சைக்குரிய சில கருத்துகளைப் பேசியிருக்கிறார். பாரத மாதா பற்றி அவர் கூறிய கருத்துகளும் பெரும் சர்ச்சைக்குள்ளாகின.

இந்த வீடியோ வாட்ஸ்அப், டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்ததும், ஜார்ஜ் பொன்னையா மத மோதலைத் தூண்டும் விதமாகப் பேசியதாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பாஜக மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் சுமார் 30க்கும் மேற்பட்ட புகார்களை அளித்தனர்.இந்நிலையில்,  ஜார்ஜ் பொன்னையா மீது சட்ட விரோதமாக கூடுதல் , ஜாதி , மதம் மற்றும் இரு தரப்பினர் இடையே விரோதத்தை உருவாக்குதல், பொது அமைதிக்கு குந்தம் ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகளை அவதூறு பரப்புதல் என 7 பிரிவுகளின் கீழ் அருமனை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் பதுங்கியிருந்த கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையாவை போலீசார் கைது செய்தனர். 

இந்த வழக்கில் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் குமரி - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள காரோடு பகுதியில் இருக்கும் ரப்பர் தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து ஸ்டீபனை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து குழித்துறை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 15 நாட்கள் காவலில் தூத்துக்குடி பேரூரணியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 

click me!