
மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று 3 மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், வைகோவின் மகன் துரை வைகோ இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
மதிமுக சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் கூட்டாகச் சந்தித்து பேசி, மதிமுகவை கலைத்துவிட்டு தாய்க்கழகமாக திமுகவுடன் இணைய வேண்டும் என்று வலியுறுத்தினர். மதிமுக மாவட்டச் செயலாளர்கள் சிலருடைய கோரிக்கையால அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவில் குடும்ப ஆதிக்கம் என்று சொல்லிதான், திமுகவிலிருந்து விலகி மதிமுகவையே வைகோ 1993-இல் தொடங்கினார். தற்போது மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு தலைமை நிலையச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மதிமுகவில் சலசலப்பு
மேலும் வைகோவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு துரை வைகோவுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 3 மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி உயர்த்திருப்பது மதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்தச் சலசலப்பு குறித்து வைகோவின் மகனும் மதிமுக தலைமை நிலையச் செயலாளருமான துரை வைகோ செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். “சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பினார். வேட்பாளர் பெயரில் 3 கட்டங்களிலும் அவருடைய பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக, செவந்தியப்பன் போட்டியிட தொகுதியை ஒதுக்கவில்லை. அதனால், தேர்தல் முடிந்து கடந்த 9 மாதங்களாகவே கட்சியில் எந்தச் செயல்பாடும் இல்லாமல்தான் செவந்தியப்பன் இருக்கிறார்.
துரை வைகோ கருத்து
தலைவர் வைகோவிடம் பலரும் இதுதொடர்பாக முறையிட்டபோது, ‘என்னுடன் 29 ஆண்டுகள் பயணித்தவர், பொடா சிறைச்சாலையில் இருந்தவர்’ என்று அவருடைய தியாகங்களைத்தான் சொன்னார். அதையெல்லாம் மனதில் வைத்துதான் அண்மையில் செவந்தியப்பனை நானும் எம்.எல்.ஏ. பூமிநாதனும் சந்தித்து பேசினோம். சுமார் 3 மணி நேரம் பேசி அவரை சமாதானம் செய்ய முயன்றோம். ஆனால், அவரோ என்னுடைய அரசியல் வாழ்க்கையே வீணாகிவிட்டது. என்னுடைய வயதுக்கு இனி எப்போது சட்டப்பேரவைக்கு போட்டியிட முடியும் என்று சொல்லிகொண்டிருந்தார். தலைவர் வைகோ வேறு ஏதேனும் வாய்ப்பை உருவாக்கி தருவார் என்று அவரிடம் எடுத்துச் சொன்னேன். கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் பதவி அவருக்கு வழங்குவது தொடர்பாகவும் பேசினேன். ஆனால், அவர் பிடிக்கொடுக்கவில்லை. மதிமுகவின் பொதுக்குழுவில் பங்கேற்க அவருக்கு அழைப்பிதழ் அனுப்பபட்டுள்ளது. அங்கு வந்து தன்னுடைய கருத்துக்களைச் சொல்லலாம்” என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
நாளை பொதுக்குழு கூட்டம்
கடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டனர். இந்நிலையில் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மத்தியிலேயே திமுகவுடன் கட்சியை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருப்பது அரசியல் அரங்கில் பேசு பொருளாகியிருக்கிறது. இதற்கிடையே மதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை கூட உள்ளது. அந்தக் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்படும் என்றும் அதிருப்தியாளர்களைச் சமாதானம் செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அதிருப்தி தலை தூக்கினால், வைகோவுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள் கட்டம் கட்டப்படலாம் என்றும் அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகின்றன.