திருக்குறளை இந்துத்துவ ‘சிமிழுக்குள்’ அடக்க நினைத்தால்... பாஜகவுக்கு வைகோ கடும் எச்சரிக்கை!

By Asianet TamilFirst Published Nov 5, 2019, 9:37 AM IST
Highlights

லத்தீன், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பு திருக்குறளுக்கு இருக்கிறது. எனவேதான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று மகாகவி பாரதி பொருத்தமாகப் பாடினார். அத்தகைய திருக்குறளைத் தந்த ‘செந்நாப் போதார்’ திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து, மதச் சாயத்தைப் பூசி பாஜக ட்விட்டரில் படம் வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்கு உரிய செயல். 

திருக்குறள் நெறியை இந்துத்துவ ‘சிமிழுக்குள்’ அடக்க நினைக்கும் மதவாத சனாதன சக்திகளின் இதுபோன்ற பண்பாடற்ற செயல்பாடுகளை பாஜக நிறுத்தாவிடில், தமிழக மக்கள் மென்மேலும் கோபாவேசமாய் கொதித்து எழுந்து தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்துக்கொள்கின்றேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:


சென்னையில் சாலை விதிகளை மீறுவோருக்கு போக்குவரத்துக் காவல் துறை வழங்கும் ரசீதுகளில் இந்தி, ஆங்கிலம் மொழி மட்டுமே இடம் பெற்று இருக்கிறது. இந்தி மொழி இடம்பெற்ற அபராத ரசீதுகளை மத்திய அரசின் தேசிய தகவல் மையம் வடிவமைத்து, அதனை தமிழகத்தில் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் இந்தித் திணிப்புக்கு அதிமுக அரசும் துணையாக இருக்கிறது. முற்றிலும் தமிழைப் புறக்கணித்துவிட்டு அபராத ரசீதுகளைத் தயாரித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. தமிழக மக்கள் இச்செயலை மன்னிக்கவே மாட்டார்கள்.


பிரதமர் மோடி அவ்வப்போது தமிழ் மொழியின் பெருமையைச் பறைசாற்றிக் கொண்டே இருக்கும்போது, இன்னொரு பக்கத்தில் தமிழ் மொழியை அழிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டு இருப்பதன் மூலம் பாஜகவின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த செப்டம்பர் 14-ல் இந்தி நாளில், இந்திதான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொக்கரித்திருந்தார். இந்தச் சூழலில், தமிழக அரசு இந்தியை நடைமுறைப்படுத்தத் தீவிரம் காட்டும் செயல் தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, தமிழக அரசு இந்தித் திணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற மனிதத் தத்துவத்தை நிலைநாட்டிய திருக்குறள், உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. நாடு, மொழி, இன, மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் பின்பற்றக்கூடிய வாழ்வியல் நெறியைப் போதிப்பதால்தான் திருக்குறள் மனித சமூகத்தின் வழிகாட்டும் நூலாகத் திகழ்கிறது. லத்தீன், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பு திருக்குறளுக்கு இருக்கிறது. எனவேதான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று மகாகவி பாரதி பொருத்தமாகப் பாடினார்.
அத்தகைய திருக்குறளைத் தந்த ‘செந்நாப் போதார்’ திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து, மதச் சாயத்தைப் பூசி பாஜக ட்விட்டரில் படம் வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்கு உரிய செயல். திருக்குறள் நெறியை இந்துத்துவ ‘சிமிழுக்குள்’ அடக்க நினைக்கும் மதவாத சனாதன சக்திகளின் இதுபோன்ற பண்பாடற்ற செயல்பாடுகளை பாஜக நிறுத்தாவிடில், தமிழக மக்கள் மென்மேலும் கோபாவேசமாய் கொதித்து எழுந்து தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று என்று தெரிவித்துக்கொள்கின்றேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

click me!